Paristamil Navigation Paristamil advert login

நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டார்: செல்வப்பெருந்தகையுடன் ராகுல் கோபம்

நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டார்: செல்வப்பெருந்தகையுடன் ராகுல் கோபம்

30 சித்திரை 2026 வியாழன் 12:09 | பார்வைகள் : 236


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, தமிழக காங்.,கின் பெரும்பாலான நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பினர்.

ராகுல், பிரவீன் சக்கரவர்த்தி, கிரீஷ் ஷோடங்கர், வேணுகோபால் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் அதையே விரும்பினர். ஆனால், தி.மு.க.,வுடன் தான் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உறுதியாக இருந்தார்.

அதற்கேற்ப காய் நகர்த்தல்களை தொடர, ராகுல் கோபமுற்றார். தி.மு.க.,வுடனான கூட்டணி பேச்சில் கடும் இழுபறி ஏற்பட்டு, கூட்டணி முறியும் நிலைக்கே சென்றது.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை வைத்து, கூட்டணி பேச்சை சுமுகமாக முடித்தார் செல்வப்பெருந்தகை. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல், தி.மு.க., கூட்டணியில் காங்., நீடித்தது. கூட்டணியில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டு பெறுவதிலும், செல்வப்பெருந்தகை கோட்டை விட, உச்சம் தொட்டது ராகுலின் கோபம்.

இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவே ராகுல் மறுத்து விட்டார். நீண்ட வலியுறுத்தல்களுக்குப் பின், தமிழகம் வந்த ராகுல், காங்கிரசார் போட்டியிடும் 28 தொகுதிகளில் ஆறு இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஒரு பிரசார கூட்டத்தில் கூட, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கவில்லை.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசாரம் செய்த ராகுலின் பேச்சை, மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏகத்துக்கும் சொதப்பினார் செல்வப்பெருந்தகை. ராகுல் பேசியதற்கு நேர்மாறாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால், அப்போதே கோபமான ராகுல், அடுத்தடுத்த பிரசார கூட்டங்களுக்கு செல்வப்பெருந்தகையை வேண்டாம் என சொல்லி விட்டார்.

தற்போது, தமிழக காங்., தலைவர் பதவிக்கு புதியவரை தேர்ந்தெடுக்கும் பணியை துவங்கி இருக்கிறது டில்லி மேலிடம். இந்நிலையில், செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்டு பேசிய ராகுல், மிக கடுமையாக கோபப்பட்டதாக தகவல் பரவி இருக்கிறது.

தமிழக காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கோபத்தில் இருந்த ராகுல், செல்வப்பெருந்தகையிடம் பேசியபோது, 'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க.,வுக்கு 25 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என, எனக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் தான், அக்கட்சியோடு கூட்டணி அமைக்க முயன்றோம்.

அப்படி கூட்டணி அமைந்திருந்தால், காங்.,கிற்கு இருக்கும் 12 சதவீத ஓட்டுகளோடு சேர்த்து, தமிழகத்தில் த.வெ.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கலாம். அருமையான வாய்ப்பு கிடைத்தது; அதை கெடுத்தது நீங்கள் தான்.

'இப்போது, தி.மு.க., கூட்டணியில் காங்., ஏற்கனவே வென்ற தொகுதிகளில் கூட மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வருகின்றன. 'ஸ்ரீபெரும்புதுாரில் நீங்களே தேறுவது கடினம் என்றும் சொல்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படுத்திய உங்களை போன்ற தலைவர்களால் தான், மாநிலங்களில் காங்கிரஸ் வளர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

என் பேச்சை மொழிபெயர்ப்பதற்கு கூட நல்ல மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்ய முடியாத சூழ்நிலையில் தான், தமிழக காங்கிரசை வைத்துள்ளீர்கள். அந்த மேடையில் நான் பேசும்போதே, சொதப்பலாக இருந்ததை உணர்ந்தேன்' என கோபமாக கூறியுள்ளார்.

இதனால், சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் அறிவிப்பு வெளியிடப்படுவது உறுதியாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.