Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து - 02 பேர் பலி

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து - 02 பேர் பலி

29 சித்திரை 2026 புதன் 11:49 | பார்வைகள் : 1663


அவுஸ்திரேலியாவின் பராஃபீல்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று இன்று புதன்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த விமானம் தரையிறங்குவதற்கு முயன்றபோது விமானக் கூடாரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Diamond DA42 என்ற இரட்டை எஞ்சின் அமையப்பெற்ற சிறிய ரக பயிற்சி விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

விமானத்துக்குள் இருந்த விமானியும் பயணி ஒருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, விமானக்கூடாரத்துக்குள் விமானம் மோதியபோது அந்த இடத்தில் இருந்த தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் 11 பேர் பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமானம் மோதி விபத்துக்குள்ளானபோது அப்பகுதியில் பெரும் கரும்புகை சூழ்ந்ததையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து இடம்பெற்றதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) விமான விபத்து தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளது.