மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! 142 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு
28 சித்திரை 2026 செவ்வாய் 03:48 | பார்வைகள் : 140
மேற்கு வங்கத்தில், இரண்டாவது மற்றும் கடைசி கட்ட சட்டசபை தேர்தலுக்கானபிரசாரம், நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள 142 சட்டசபை தொகுதிகளில் நாளை(ஏப்.,29) ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே 4ல் எண்ணப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதியை, தேர்தல் கமிஷன் மார்ச் 15ல் வெளியிட்டது. இதன்படி, புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில், கடந்த 9ல், ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. முறையே, 91.23; 85.64 மற்றும் 79.63 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.
தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக, கடந்த 23ல் தேர்தல் நடந்தது. இதில், இதுவரை இல்லாத அளவாக 85.10 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதே போல், மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில், முதற்கட்டமாக 152 இடங்களில் கடந்த 23ல் தேர்தல் நடந்தது. இதில், 93.19 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில், மீதமுள்ள 142 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. நாடியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், கொல்கட்டா, ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 142 தொகுதிகளில், நாளை காலை 7:00 - மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், 3.24 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உடையவர்கள். இதில் ஆண்கள், 1.64 கோடி; பெண்கள், 1.57 கோடி.
பதற்றமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, ஆளும் திரிணமுல் காங்., தலைவர்களும், பா.ஜ., தலைவர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிலையில், இரு வேறு இடங்களில் நடந்த சாலை பேரணியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார்.
ஜாதவ்பூர், டோலிகஞ்ச் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின், தன் சொந்த தொகுதியான பவானிபூரில் மக்களை சந்தித்து ஆதரவு கோரினார். மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமுல் காங்., பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜி, ராணாகாட், ஹூக்ளி, ஆரம்பாக், மகேஷ்டலா ஆகிய இடங்களில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
மேற்கு வங்கத்தில் நாளை ஓட்டுப்பதிவு முடிந்ததும், தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். இதை அறிய, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வமாக உள்ளன. ஐந்து மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பிரதமர் மோடியின் 5 முக்கிய வாக்குறுதிகள்
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூர் என்ற பகுதியில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி வெளியிட்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகள்:
மேற்கு வங்கத்தில் அரசு வேலைக்கான அறிவிப்புகள் குறிப்பிட்ட கால அட்டவணையின்படி முறையாக வெளியிடப்படும். தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு, 'வேலை வாய்ப்பு மேளா'க்கள் மூலம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும். திரிணமுல் காங்., ஆட்சியின் அச்சத்திலிருந்து அரசு ஊழியர்கள் விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு, 7-வது ஊதியக் குழுவின் முழு பலன்களும் வழங்கப்படும் .
ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், 'கன்டென்ட் கிரியேட்டர் லேப்'கள் அமைக்கப்படும். இதன் மூலம் டிஜிட்டல் துறையில் இளைஞர்களின் திறமை ஊக்குவிக்கப்படும்.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, 'வி.பி., ஜி ராம் ஜி' சட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம், 125 நாட்கள் வேலை உறுதி செய்யப்படும். மேலும், 'பி.எம்., விஸ்வகர்மா, பி.எம்., சம்பதா' ஆகிய திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்.
நகரங்களில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு, 'பி.எம்., ஸ்வயநிதி' திட்டத்தின் கீழ் முழுமையான கடனுதவி மற்றும் பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, வங்கிகள் மூலம் நேரடி உதவிகள் வழங்கப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan