Paristamil Navigation Paristamil advert login

உபரி உணவை பகிர்வோம்: மத்திய அரசின் திட்டத்திற்கு வரவேற்பு

உபரி உணவை பகிர்வோம்: மத்திய அரசின் திட்டத்திற்கு வரவேற்பு

28 சித்திரை 2026 செவ்வாய் 13:26 | பார்வைகள் : 324


மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) கீழ், தன்னார்வலர்கள் உதவியோடு, உபரியாகும் உணவை வீணாக்காமல், ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்திற்கு, நல்ல வரவேற்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், 2017ல், இந்திய உணவு பகிர்வு கூட்டணி (Indian Food Sharing Alliance) என்ற அமைப்பு துவங்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள், உணவு தயாரிக்கும், சப்ளை செய்யும் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவியோடு, தினசரி உபரியாகும் உணவை உடனடியாக சேகரித்து, உணவில்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கைக்கோர்க்கும் நிறுவனங்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., யின் சான்றளிக்கப்பட்ட முகவர்களாக இருப்பர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், இப்பணிகளுக்கான உதவிகள் பெற, வழிவகை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இத்திட்டத்திற்கு, 'நோ புட் வேஸ்ட்' தன்னார்வ அமைப்பு மட்டுமே, அங்கீகரிக்கப்பட்ட முகவராக உள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 350 க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள், அரசு மருத்துவமனை முன்பு, ஆதரவற்ற இல்லங்களுக்கு தினசரி உபரியாகும் உணவுபகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, நோ புட் வேஸ்ட் நிறுவனர் பத்மநாபன் கூறுகையில், தமிழகத்தில் தினசரி உணவு தேவைக்கான இடங்கள், ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம். அனைத்து திருமண மண்டபங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், விடுதிகளின் கிச்சன்களில் மீதமாகும் உணவை பெறும் வகையில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உதவியோடு, இந்திய உணவு பகிர்வு கூட்டணியின் செயலி, தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜோகோ நிறுவனங்களின் கிச்சனில், தினசரி மீதமாகும் உணவை பெற, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல், காய்கறி, பழங்கள் அவை எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில், உணவில்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு, தன்னார்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதை மேலும் விரிவுப்படுத்த, விழிப்புணர்வை அதிகரிக்க, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. உணவு வழங்க விரும்புமுள்ளோர், 90877 90877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

இத்திட்டத்தின் கீழ், 10 மாவட்டங்களில் கடந்த மாதம் (மார்ச்) மட்டும் 83 ஆயிரத்து 360 பேர் பசியாற சாப்பிட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 22,460 பேருக்கு கடந்த மாதம் உணவு வழங்கப்பட்டுள்ளது. முகூர்த்த மாதங்களில், மீதமாகும் உணவு அதிகரிப்பதால், பயனாளிகள் எண்ணிக்கையும் கூடும். இதுசார்ந்து மாதந்தோறும் மாநில உணவு பாதுகாப்பு துறைக்கு, யாரிடம் எவ்வளவு உணவு பெறப்பட்டது, எத்தனை பேர் அதை சாப்பிட்டனர் என்ற அறிக்கை சமர்பிக்கிறோம். தற்போது வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதால், சேகரமாகும் உணவின் அளவும் குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருக்கும்நாட்களில், எங்கள் அமைப்பின் கிளவுட் கிச்சனில் உணவு தயாரித்தும் வழங்குகிறோம் என்கிறார், பத்மநாபன்.