Paristamil Navigation Paristamil advert login

உலக வானிலையியல் அமைப்பின் அபாய எச்சரிக்கை

உலக வானிலையியல் அமைப்பின் அபாய எச்சரிக்கை

26 சித்திரை 2026 ஞாயிறு 12:59 | பார்வைகள் : 387


2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி கோலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிலைமை வளர்ச்சியடையக்கூடும் என உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிலைமை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய பசுபிக் சமுத்திரத்தின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதையே எல் நினோ என்று அழைக்கிறோம். இது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வானிலையையும் பாதிக்கக்கூடிய ஒரு இயற்கை காலநிலை மாற்றமாகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆரம்பிக்கக்கூடிய இந்த நிலைமை, அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக வானிலையியல் அமைப்பு கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் முதல் மே வரையிலான காலப்பகுதியில் எல் நினோ உருவாவதற்கான வாய்ப்பு 10% மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மே மாத இறுதியில் இது குறித்த புதிய உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (25) விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் நிலவும் என எச்சரித்துள்ளது.