Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., வேட்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆலோசனை

தி.மு.க., வேட்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆலோசனை

25 சித்திரை 2026 சனி 10:05 | பார்வைகள் : 243


திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., வேட்பாளர்களுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, பெரம்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில், கட்சி நிர்வாகிகள் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை என, வேட்பாளர்கள் புகார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் வந்தார். அங்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க., வேட்பாளர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் ஓட்டுப்பதிவு தொடர்பாக, ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம், ஓட்டுப்பதிவு சதவீதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். அப்போது, சென்னை பெரம்பூர் தொகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகி ஒருவர் மீதும், வட்ட நிர்வாகிகள் மீதும், வேட்பாளர்கள் சரமாரியான புகார்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

சென்னையில் த.வெ.க.,வுக்கு கிடைத்த ஓட்டுகளால், ஏழெட்டு தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என்ற தகவல் பரவியது.

பெரம்பூரில் தி.மு.க., வேட்பாளர் சேகருக்கு, கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யவில்லை எனவும் கூறப்பட்டது. அத்தொகுதியில், ஏழு வார்டுகளில், 14 வட்ட செயலர்கள் உள்ளனர். அவர்களில் சிலர், ஓட்டுப்பதிவின்போது, 'டிமிக்கி' கொடுத்துள்ளனர்.

துணை முதல்வர் உதயநிதி, அவரது உதவியாளர் செந்தில் நேரடி கண்காணிப்பில், இளைஞரணி மாநில நிர்வாகி ஜோயல் தலைமையில், 150 இளைஞர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

ஓட்டுப்பதிவையொட்டி, வெளியூர் ஆட்கள் என்பதால், ஜோயல் தலைமையிலான இளைஞர் படையினர் வெளியேறிய பின், தேர்தல் பணி மந்தமாகியுள்ளது. எனவே, பெரம்பூரில் தி.மு.க., வேட்பாளர் தோற்றால், நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என்பது உறுதி.

துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் சேகர்பாபு, த.வெ.க., வேட்பாளர் சினோரா அசோக் இடையே நடந்த மோதல் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.