Paristamil Navigation Paristamil advert login

வங்கிகளுக்கு ஆபத்தாகும் ஏ.ஐ., : பாதுகாப்பை பலப்படுத்த நிதியமைச்சர் உத்தரவு

வங்கிகளுக்கு ஆபத்தாகும் ஏ.ஐ., : பாதுகாப்பை பலப்படுத்த நிதியமைச்சர் உத்தரவு

25 சித்திரை 2026 சனி 05:13 | பார்வைகள் : 198


அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் உருவாக்கியுள்ள, 'கிளாட் மித்தோஸ்' எனப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், வங்கி துறையின் சைபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என, கவலை தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது தொடர்பாக வங்கி தலைவர்களுடன் நேற்று உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடத்தினார்.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த, 'கிளாட் மித்தோஸ்' எனப்படும் ஏ.ஐ., மாதிரி, சைபர் பாதுகாப்பில் மனிதர்களால் கண்டறிய முடியாத ஆயிரக்கணக்கான நுணுக்கமான பிழைகளைக் கண்டறியும் திறன் உடையது.

குறிப்பாக, 27 ஆண்டுகளாக மறைந்திருந்த பாதுகாப்பு ஓட்டைகளை இது கண்டறிந்துள்ளது. இதன் அபரிமிதமான, 'ஹேக்கிங்' திறன் காரணமாக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இது இன்னும் விடப்படவில்லை.

இருப்பினும், சமீபத்தில் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், இந்த ஏ.ஐ.,- தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், நம் நாட்டு வங்கி துறையின் சைபர் பாதுகாப்புக்கு, கிளாட் மித்தோஸ் ஏ.ஐ., மாதிரியால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பாக, பல்வேறு வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பங்கேற்றார்.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

கிளாட் மித்தோஸ் ஏ.ஐ., மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் இது வரை இல்லாத ஒன்று. இதற்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே அதிகப்படியான விழிப்புணர்வு, தயார்நிலை மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

வங்கிகள் தங்களின் ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளையும், வாடிக்கையாளர்களின் தரவுகளையும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அச்சுறுத்தல்களை விரைவாக எதிர்கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க, இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.