Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பகிர்ந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பகிர்ந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

24 சித்திரை 2026 வெள்ளி 08:28 | பார்வைகள் : 214


இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக இனவாதத்தை துாண்டும் வகையில் பிரபல அரசியல் விமர்சகர் மைக்கேல் சாவேஜின் சர்ச்சை கருத்து அடங்கிய அறிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபரான இரண்டாவது முறையாக கடந்தாண்டு ஜன.,ல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், குடியேற்றக் கொள்கைகளில் பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வந்தார். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தங்கள் மண்ணில் பிறப்பதாலேயே, வெளிநாட்டைச் சேர்ந்தவரின் குழந்தைக்கு, அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் குடியுரிமை வழங்குவதில்லை என்று நேற்று முன்தினம் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், 30க்கும் மேற்பட்ட நாடுகள், தங்கள் நாட்டில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைக்கு குடியுரிமை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய, அந்நாட்டு அரசியல் விமர்சகர் மைக்கேல் சாவேஜின் முந்தைய அறிக்கை ஒன்றை டிரம்ப், தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முழுக்க முழுக்க இனவாதத்தைத் துாண்டும் வகையில், இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதில் சாவேஜ் கருத்து தெரிவித்திருந்தாார்.

டிரம்ப் வெளியிட்டுள்ள சாவேஜின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒன்பது மாத கர்ப்பிணிகள் விமானத்தில் ஏறி அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுக்கின்றனர். அந்த குழந்தை உடனடியாக அமெரிக்கக் குடிமகனாகிறது. அதன் பிறகு அந்தப் பிள்ளை மூலமாக இந்தியாவில் இருந்தோ சீனாவில் இருந்தோ தங்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அமெரிக்காவிற்குள் இழுத்துக் கொள்கின்றனர்.

இந்திய மற்றும் சீனக் குடியேற்றவாசிகள் வெறும் மென்பொறியாளர்கள் அல்ல, அவர்கள் 'லேப்டாப்' வைத்திருக்கும் தாதாக்கள். மாபியா கும்பல்களை விடவும் இவர்கள் அதிக சேதத்தை அமெரிக்காவிற்கு செய்துள்ளனர்.

இந்தியாவும், சீனாவும் நரகக் குழிகள். அமெரிக்காவின் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் வெள்ளையர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அவை இந்தியர்களாலும், சீனர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.