Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

11 பங்குனி 2026 புதன் 17:56 | பார்வைகள் : 1084


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புபட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. நேற்று இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது.

இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று அறிவித்துள்ளன.

ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன" என அவர் குறிப்பிட்டுள்ளார்.