Paristamil Navigation Paristamil advert login

டிரம்ப் உருவப்படத்தை எரித்தார் ஜம்மு - காஷ்மீர் மாஜி முதல்வர்

டிரம்ப் உருவப்படத்தை எரித்தார் ஜம்மு - காஷ்மீர் மாஜி முதல்வர்

5 பங்குனி 2026 வியாழன் 12:18 | பார்வைகள் : 1511


ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டு எரித்தார்.


அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில், மேற்காசிய நாடான ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி, 86, சமீபத்தில் கொல்லப்பட்டார். இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது.

கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டு எரித்தார்.

மேலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மறைந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனின் உருவப்படத்தையும் அவர் எரித்தார். 'கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசும், ஜம்மு - காஷ்மீர் அரசும் மவுனம் காப்பது ஏன்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.