திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
9 சித்திரை 2026 வியாழன் 08:13 | பார்வைகள் : 332
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மலை பகுதியை அளவீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
தொல்லியல்துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மலையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், இடிபாடுகளை அகற்ற வேண்டும் என மத்திய தொல்லியல்துறை இயக்குனர், தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
2025 பிப்.,19ல் இரு நீதிபதிகள் அமர்வு, ‛மத்திய கலாசாரத்துறை செயலர், தொல்லியல்துறை இயக்குனருக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பளித்தபின் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
அதிகாரிகளுக்கு புதிதாக மனு அனுப்பினேன். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. மத்திய கலாசாரத்துறை செயலர் விவேக் அகர்வால், மத்திய தொல்லியல்துறை இயக்குனர்கள் ராம்ஜி நிகாம், யதுபீர் சிங் ராவத் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன்:
மலையை அளவீடு (சர்வே) செய்தால் மட்டுமே மனுவை பரிசீலித்து பைசல் செய்ய இயலும். அளவீடு செய்ய மத்திய தொல்லியல்துறை தயார். தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் மதுரை கலெக்டரை எதிர்மனுதாரராக இந்நீதிமன்றம் தானாக முன்வந்து இணைத்துக் கொள்கிறது. அவர் மத்திய தொல்லியல்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் திருப்பரங்குன்றம் மலை பகுதியை அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மே 31 க்குள் முடிக்க வேண்டும். பணி முடிந்ததும் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் முதல்வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan