Paristamil Navigation Paristamil advert login

மகனுடன் மல்லுக்கட்டும் ராமதாஸ்; 11 தொகுதிகளில் எதிர்த்து போட்டி

மகனுடன் மல்லுக்கட்டும் ராமதாஸ்; 11 தொகுதிகளில் எதிர்த்து போட்டி

9 சித்திரை 2026 வியாழன் 07:08 | பார்வைகள் : 292


வரும் சட்டசபை தேர்தலில், 11 தொகுதிகளில் பா.ம.க., அன்புமணி அணி வேட்பாளர்களுக்கு எதிராக, தனது அணி வேட்பாளர்களை கட்சி நிறுவனர் ராமதாஸ் நிறுத்தியுள்ளார்.

பா.ம.க.,வில், ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன், கட்சியின் மாம்பழம் சின்னத்தையும் அவருக்கு ஒதுக்கியுள்ளது.

அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 18 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள ராமதாஸ், 37 தொகுதிகளில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவர்கள், சசிகலா கட்சியின் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அன்புமணி நிறுத்தியுள்ள 18 வேட்பாளர்களையும் தோற்கடிக்கப் போவதாக ராமதாஸ் கூறியிருந்தார். அதன்படி, சேலம் மேற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தர்மபுரி, திருப்போரூர், ஜெயங்கொண்டம், போளூர், கீழ்வேளூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய 11 தொகுதிகளில், அன்புமணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி, நேருக்கு நேராக மோத ராமதாஸ் தயாராகியுள்ளார்.

ரிஷிவந்தியம் தொகுதியில், சசிகலா கட்சி போட்டியிடுகிறது. பா.ம.க., போட்டியிடும் பென்னாகரம், மயிலாடுதுறை, உத்திரமேரூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்துார் ஆகிய, தொகுதிகளில், ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

ராமதாஸ் பக்கம் இருக்கும் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ராமதாசால் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மகன் தமிழ்குமரன், காங்கிரசில் இணைந்து பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். மகன் போட்டியிடுவதால், இம்முறை தேர்தல் களத்திலிருந்தே ஜி.கே.மணி ஒதுங்கி விட்டார்.

தி.மு.க.,வின் துாண்டுதலில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதலை ஏற்படுத்தியவர் ஜி.கே.மணி. இப்போது, மகனை தி.மு.க., வாயிலாக காங்கிரசுக்கு அனுப்பி போட்டியிட வைத்துள்ளார்' என, அன்புமணி தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.