Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் அமைதி வாய்ப்பு?

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு – மத்திய கிழக்கில் அமைதி வாய்ப்பு?

8 சித்திரை 2026 புதன் 16:54 | பார்வைகள் : 212


மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்மூஸ் நீரிணையை திறக்க ஈரான் மீது காலக்கெடு விதித்திருந்தார்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவில், “இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழியக்கூடும். அது மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது” என கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைய இருந்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் (Shehbaz Sharif ), இந்தக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அமெரிக்கா தாக்குதல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டது.

அதன்படி, டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான “குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்” நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரானுடன் நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் நிலையான அமைதி தொடர்பான உறுதியான ஒப்பந்தத்தை எட்டுவதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவைப் பெற்றுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “போரின் மூலம் ஈரான் அடைய விரும்பிய ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அமெரிக்காவை எங்கள் 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளோம். மேலும், ஹோர்மூஸ் நீரிணையின் கட்டுப்பாடு, செறிவூட்டல் உரிமைகள் மற்றும் தடைகள் நீக்கம் ஆகியவற்றையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஆக்கிரமிப்பை நிறுத்தவும், சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிராந்தியத்திலிருந்து படைகளை திரும்பப் பெறவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே எதிரியின் அழுத்தங்களையும் காலக்கெடுக்களையும் நிராகரித்து, எங்கள் தேசிய இலக்குகளுக்கே முன்னுரிமை அளித்தோம்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


“போரின் பெரும்பாலான நோக்கங்கள் நிறைவேறியுள்ளன என்ற நற்செய்தியை மக்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், வரி நீக்கம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள், மத்திய கிழக்கில் நீண்டகால பதற்றத்திற்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.