எரிபொருட்களின் விலை அதிகரிப்பு - பாகிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகள்!
7 சித்திரை 2026 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 209
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கையாக சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களை இரவு 8 மணியுடன் மூட அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று செவ்வாய்க்கிழமை (7) முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினைகளால் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பஞ்சாப், பலூசிஸ்தான், இஸ்லாமாபாத் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கு மேல் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் இல்லங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளும் இரவு 10 மணிக்கு மேல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அத்தியாவசியத் தேவையான மருந்தகங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 முதல் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் முதலான எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு கூடுதல் நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது
அரசுத் துறைகளில் 4 நாள் வேலை வாரம், எரிபொருள் படிகள் குறைப்பு, அரசு செலவினங்களில் 20 சதவீதக் குறைப்பு முதலியவற்றை பாகிஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan