கூட்டணி நலனுக்காக முடிவை மாற்றினேன்; சொல்கிறார் திருமா
6 சித்திரை 2026 திங்கள் 12:36 | பார்வைகள் : 199
எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவை வாபஸ் பெற்றது குறித்து விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம், திருமாவளவன் கூறியதாவது:
தமிழக மக்கள் திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். இந்த தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்கு செல்வது, என்னுடைய நோக்கத்திற்கு பயன் தரும் என்று நம்பினேன். பார்லிமென்ட் வருடத்திற்கு 3 முறை கூடுகிறது.
ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் ஒரு முறையோ, இரு முறையோ பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் 3 நிமிடங்களில் இருந்து 5 நிமிடம் வரை தான் வாய்ப்பு. ஆகவே முழுமையாக என்னுடைய நோக்கத்தின் படி செயல்முடியாத சூழல். சட்டசபையில் இருந்தால் விளிம்பு நிலை மக்களுக்கான பிரச்னையை பேச முடியும் என்று நம்பிக்கை. அதன் அடிப்படையில் நான் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தேன்.
எங்கள் கூட்டணி நலனுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன். எந்த வகையிலும் கூட்டணியின் நலன் பாதிக்கப்படக் கூடாது என விரும்புகிறேன். விசிகவுக்கு முன்பே காட்டுமன்னார்கோவில் மண்ணில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இளைய பெருமாள்.
இளைய பெருமாள் தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாகி இருப்பதற்கு இளையபெருமாளின் பரிந்துரையே காரணம். காட்டுமன்னார்கோவிலில் இளையபெருமாளின் மருமகளுக்கு வாய்ப்பு தரலாம் என்று முதலில் முடிவு செய்தோம், அவர் தலித் சமூகம் அல்லாதவர் என்பதால் போட்டியிட முடியவில்லை.
இளைய பெருமாள் குடும்பத்திற்கு மரியாதை தர வேண்டும் என்பதற்காக எனது தொகுதியை விட்டுத்தந்தேன். காட்டுமன்னார் கோவில் தொகுதி வேட்பாளராக ஜோதிமணியை அறிவித்துள்ளேன். புதுச்சேரியில் வேட்புமனுதாக்கல் முடிவுற்ற பிறகு பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு காணப்பட்டது. அதன்படி எங்களுக்கு உழவர்கரை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.
16 இடங்களில் காங்கிரஸ் மற்றும் 13 இடங்களில் திமுகவும் போட்டியிடுவது உறுதியானது. உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியினர் வேட்புமனுதாக்கல் செய்து தங்களது மனுக்களை திரும்பப் பெறவில்லை.காங்கிரஸ் மேலிடத்திலிருந்து முகுல் வாஷ்னிக் போன்ற பெரிய தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உழவர்கரையில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவது, அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பணியாற்றுவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் நாங்கள் வேட்புமனுதாக்கல் செய்திருந்த ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனம் தொகுதிகளில் வேட்புமனுக்களை திரும்பப் பெறாவிட்டாலும் கூட, நாங்கள் விசிக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட போவதில்லை.
மாறாக அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என முடிவெடுத்து உள்ளோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan