Paristamil Navigation Paristamil advert login

ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் இராணுவம் கடும் எதிர்ப்பு

ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் இராணுவம் கடும் எதிர்ப்பு

5 சித்திரை 2026 ஞாயிறு 08:46 | பார்வைகள் : 1651


48 மணித்தியாலங்களுக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகளை அழிப்போம் என்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மிரட்டலை ஈரான் இராணுவம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.

ஈரானின் மத்திய இராணுவத் தளபதி ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி விடுத்துள்ள அறிக்கையில், டிரம்ப்பின் இந்த மிரட்டல் ஒரு "உதவியற்ற, பதற்றமான, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை" எனச் சாடியுள்ளார்.

முன்னதாக ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஒப்பந்தம் ஒன்றிற்கு வர அல்லது ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறந்து விட இன்னும் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ளன, இந்த காலக்கெடுவிற்குள் இணக்கம் காணப்படாவிட்டால் "பாரிய அழிவுகள் ஏற்படும்" என பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்குப் பதிலளித்துள்ள ஜெனரல் அலியாபாடி, "இந்த செய்தியின் எளிய அர்த்தம் என்னவென்றால், நரகத்தின் கதவுகள் உங்களுக்காகவே திறக்கப்படும் என்பதுதான்" எனப் பாரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த நேரடி வார்த்தைப்போர், போர் மூளும் அபாயத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.