Paristamil Navigation Paristamil advert login

கேரள மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரதமர் மோடி

கேரள மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்; பிரதமர் மோடி

5 சித்திரை 2026 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 335


சுயநல அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரளாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரள சட்டசபைக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது;  கேரளாவில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. ஏப்ரல் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4ம் தேதி பல ஆண்டு கால தவறான ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை வழியனுப்புவதற்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது. கேரளாவில் முதல்முறையாக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவ சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஒரு மாநிலத்தைத் தவிர, வடகிழக்கின் 7 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது. அங்கு கடந்த 50, 60 ஆண்டுகளில் யாரும் செய்யாததை நாங்கள் சாதித்துள்ளோம். கோவாவிலும் கிறிஸ்தவ சமூகத்தினர் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். அங்கு தொடர்ந்து பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அது வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. கேரளாவிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால், கேரளாவும் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டும்.

இங்குள்ள சபரிமலை ரயில்வே திட்டம் இப்பகுதியில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். இது சபரிமலைக்கு நேரடி இணைப்பை மேம்படுத்தும். இதனால், உள்ளூர் வர்த்தகத்திற்குப் புதிய வேகம் கிடைக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் மாநில அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு ஆட்சிக்கு வரும்போது, இது போன்ற அனைத்துத் தடைகளும் நீக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

தேர்தல்களில் வெற்றி பெறவும், மோடியைத் திட்டுவதற்காகவும், ஒரு கோடி புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ள காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஈரானில் உள்ள தமிழக, கோவா, கேரளா, தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள நெருக்கடியில் இருந்து அவர்களை நாம் மீட்டு வருகிறோம்.  இன்று நூற்றுக்கணக்கான மீனவ சகோதர சகோதரிகள் இந்தியாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உயிர் எங்களுக்கு விலைமதிப்பற்றது.  சுயநல அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.