Paristamil Navigation Paristamil advert login

நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை

நேட்டோவிலிருந்து விலகுவோமென ட்ரம்ப் எச்சரிக்கை

2 சித்திரை 2026 வியாழன் 18:23 | பார்வைகள் : 306


நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின மதிய விருந்தில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், நேட்டோ அமைப்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க கப்பல்களை அனுப்ப மறுக்கும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை அவர் “காகிதப் புலிகள்” என விமர்சித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய நாடுகள் தங்களது இராணுவ பங்களிப்பை அதிகரிக்கத் தவறினால், நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நமக்கு மிகவும் மோசமான கூட்டாளிகள் உள்ளனர். இனிவரும் காலங்களில் அவர்களின் உதவி நமக்குத் தேவையில்லை என நினைக்கிறேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மார்க் ரூட்டேவின் இந்த விஜயம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக நேட்டோ ஊடகப் பேச்சாளர் அலிசன் ஹார்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் நிலைமை மற்றும் அத்திலாந்திக் கூட்டணி நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை பற்றி, அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய ஈரான் போர் சூழலில் ஐரோப்பிய நாடுகளின் மந்தமான செயல்பாடுகள் அமெரிக்க நிர்வாகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.