Paristamil Navigation Paristamil advert login

சட்டசபை தேர்தலில் போட்டி இல்லையா; அண்ணாமலை ஆதரவாளர்கள் விரக்தி

சட்டசபை தேர்தலில் போட்டி இல்லையா; அண்ணாமலை ஆதரவாளர்கள் விரக்தி

2 சித்திரை 2026 வியாழன் 06:21 | பார்வைகள் : 212


தமிழக சட்டசபைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்ற தகவலால் அவரது ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலேயே நேரத்தை வீணடிக்கின்றன. இதற்கான சுமுக சூழல் இருகட்சிகளிலும் இல்லை. உட்கட்சி மோதல்களே இதற்கு காரணம்.

பா.ஜ.,வைப் பொறுத்தவரை அண்ணாமலை மாநில தலைவரான பின் பெரும் எழுச்சி பெற்றது. அதனால் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அ.தி.மு.க., கூட்டணிக்காக அவரை 'முன்னாள்' தலைவராக்கியதால் விரக்தியடைந்தார். அதன்பின் தேசிய பொறுப்பு உட்பட எந்த பதவியும் இல்லாததால் அவரும், ஆதரவாளர்களும் மனம் நொந்தனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கியதால் தனக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அவர் ஓரங்கட்டப்பட்டதாக கருதியதால் தனது தந்தையின் உடல்நலம் கருதி தேர்தலில் தொகுதி பொறுப்பை ஏற்க போவதில்லை என்று தெரிவித்தார். அதன்பின் அதையே காரணம் காட்டி அவரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த 'சீனியர்கள்' விரும்பாத நிலையில் நிலைமை மோசமானது. அவருக்கான ஒவ்வொரு நிலையும் அவரது ஆதரவாளர்களிடையே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

கட்சியில் எழுச்சியை ஏற்படுத்திய அவரை எந்த பொறுப்புக்கும் வரவிடாமல், நிகழ்ச்சிகளிலும் முக்கியத்துவம் தராமல் ஓரங்கட்டுகின்றனர். இந்தத் தேர்தலிலும் கோவையில் சீட் எதிர்பார்த்த அவருக்கு மொடக்குறிச்சியில் தருவதாகக் கூறியுள்ளனர். அங்கும் பா.ஜ.,வும் கூட்டணி கட்சியினரும் காலிசெய்ய 'உள்ளடி' வேலை செய்ய முயற்சிப்பதாக தெரிந்ததால் போட்டியிட விருப்பமில்லை என்றே கூறி வருகிறார்.

சமீபத்தில் சில நண்பர்களுக்கு அவர் அலைபேசியில் அனுப்பிய தகவலிலும் தேர்தலில் 'போட்டியிட வில்லை' என்று உறுதியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.  அவர் இல்லாத தேர்தலில் நாங்களும் பணியாற்ற தேவையில்லை எனக் கருதுகிறோம் என்றனர்.