Paristamil Navigation Paristamil advert login

திமுக தேர்தல் வாக்குறுதி பாகம் 1 !

திமுக தேர்தல் வாக்குறுதி பாகம் 1 !

30 பங்குனி 2026 திங்கள் 05:24 | பார்வைகள் : 187


இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்,8 ஆயிரம் மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன்,   என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின்  மார்ச் 29 வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

ஆறாவது முறையாக  திமுகவை ஆட்சியில் அமரவைத்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வந்திருக்கிறேன்.  இந்த உணர்வோடு தமிழக சட்டசபை தேர்தலுக்கான எங்கள் வாக்குறுதியை வெளியிடுகிறேன்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று  7 வது  முறையாக ஆட்சி அமைக்க உள்ளது திமுக. இந்த நம்பிக்கை கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் உண்டு.  இதுவரைக்கும் எந்த மாநில அரசும் இந்தளவு சாதனைகளை நிகழ்த்தியது இல்லை என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு ஏராளமான  சாதனை திட்டங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம்.

தமிழக உரிமை திட்டம், விடியல் பயணம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் தமிழ் புதல்வன், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48,கலைஞர் கனவு இல்லம்,தாயுமானவர் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம் என ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்த்துள்ளோம். அதனால், நமது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை. நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை சொல்லும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

சட்டசபை தேர்தலின் போது பத்தாண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து  பயணத்தை துவங்கினோம். அதற்கான தொலைநோக்கு திட்டங்களை   வகுத்தோம். ஒவ்வொரு தனி மனிதரும் பயனடையும் திட்டங்களை உருவாக்கினோம். கொடுத்த வாக்குறுதிப்படி 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாயாக உரிமைத் தொகையாக கொடுக்க துவங்கினோம்.

தேர்தலை காரணம் காட்டி அதனை தடுக்க பாஜ முயற்சி செய்தது. அந்த சதியை முன் கூட்டியே உணர்ந்து 3 ஆயிரம் ரூபாயும், கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கிக்கணக்கில் செலுத்தினோம்.அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றும் வகையில்,பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றி அரசு ஊழியர் மனங்களை குளிர வைத்தோம். தமிழக வளர்ச்சியை கெடுக்கும் கூட்டம் தான் திமுகவை எதிர்க்கிறது. அவர்கள் ஏராளமான பொய் செய்திகளை பரப்பினர். அது தமிழக மக்களிடம் எடுபடவில்லை.

இப்போது ஒட்டு மொத்த தமிழக மக்களின் எண்ணம், திராவிட மாடல் கட்டமைத்த வளர்ச்சி பாதையில் தமிழகம் பயணிக்கணும். தமிழகம் தலைசிறந்த தலைநிமர்ந்த மாநிலமாக இருக்க வேண்டும். கல்வியை வளர்க்க, வளர்ச்சியை உறுதி செய்ய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைய வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணம்.  இதுவரை செய்த திட்டங்களை விஞ்சும் வகையில் 2.0 இருக்கும்.

எங்களின் கொள்கைகள் , திட்டங்கள் மட்டும் அல்ல. இதற்காக அமைக்கப்பட்ட குழு  மாநிலம் முழுதும் பயணம் செய்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு தயாரித்துள்ளனர். இந்ததேர்தல் அறிக்கையை தயாரிக்க  கனிமொழி, இளங்கோவன், தியாகராஜன், டிஆர்பி ராஜா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சேனாதிபதி, தமிழரசி, சந்தானம், சுரேஷ் ஆகியோருக்கு எனது பாராட்டையும் நன்றியை தெரிவி்த்து கொள்கிறேன்.உங்களின் நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்.

01.1 முதல் 5 ம்வகுப்பு வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது. கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவு திட்டம் 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
02. ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் பெற்று வரும் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
03. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட   விவசாயிகளுக்கு எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்கள் வழங்கப்படும்.
04. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
05. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சம் ரூபாய் ஆகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்
06. உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க  புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் இனி 1,500 ரூபாய் ஆக உயர்த்தப்படும்
07. நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ,500 ரூபாய் ஆக.உயர்த்தி வழங்கப்படும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
08. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.
09. முதியோர் உதவித்தொகை 1,200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.
10 மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
11. அன்னை தமிழை போற்ற பன்னாட்டு தமிழறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
12. மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய  தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கையை மாநிலம் முழுவதும் விவாத பொருளாக்கி மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து உரிமைகளையும் மேற்கொள்வோம்.
13. சுய உதவி குழுவில் இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறும் வகையில் பிணை இன்றி 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்படும்.
14. பேரிடர் கால இழப்பீடுகளாக இறவை பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் ஹெக்டேர் ஒன்று ரூ.25 ஆயிரம்  ஆகவும் நீண்ட கால பயிர்களுக்கு ரூ.27 ஆயிரம் ரூபாய் ஆகவும், மானாவாரிப் பயிர்களுக்கு ரூ.12 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
15.  மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
16. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்  சிறப்பாக செயல்படுத்தப்படும்.
17.  மத்திய அரசு எட்டாவது ஊதியக்குழு  செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.
18. அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலிப்பணியிடங்கள் கால தாமதமின்றி நிரப்பப்படும்.
19.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி  உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை
20. உயர்கல்வி படிக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு 5 ஆண்டுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.