Paristamil Navigation Paristamil advert login

ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் - ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஈரான் கடும் கண்டனம்

 ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் - ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஈரான் கடும் கண்டனம்

28 பங்குனி 2026 சனி 06:04 | பார்வைகள் : 238


ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி , தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது கடந்த பெப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்குமாறு ஐநா மனித உரிமைகள் பேரவையிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

ஈரான் அமைச்சர் உரையாற்றிய போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுப் பிரதிநிதிகள் அவையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷஜாரே தய்யேபா ஆரம்பப் பாடசாலை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 175-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டதாக அராக்சி தெரிவித்தார்.இத்தாக்குதலை ஒரு "போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று அவர் வர்ணித்தார்.

அமெரிக்கப் படைகளே இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அமெரிக்க ராணுவம் இது குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் காலாவதியான இலக்கு தரவுகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அதன் விளைவாகப் பள்ளிக்கும் அதனையொட்டியுள்ள இராணுவ தளத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறியத் தவறியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரான் போரை விரும்பவில்லை, ஆனால் தன்னைத் தற்காத்துக் கொள்வதை அது தொடரும் எனவும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்ட முறையில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதாக அராக்சி குற்றம் சாட்டினார்.

ஈரான் முழுவதும் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.