Paristamil Navigation Paristamil advert login

குழாய் மூலம் காஸ்! பி.என்.ஜி., வசதிக்கு மாறியே ஆக வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

குழாய் மூலம் காஸ்! பி.என்.ஜி., வசதிக்கு மாறியே ஆக வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

26 பங்குனி 2026 வியாழன் 09:22 | பார்வைகள் : 191


பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு கிடைக்கும் சாத்தியமான பகுதிகளில், நுகர்வோர் அந்த வசதிக்கு மாற வேண்டும்; இல்லையெனில், அவர்களுக்கான வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்' என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் காரணமாக, சமையல் எரிவாயு வினியோக தொடரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், 'எஸ்மா' எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை:

பி.என்.ஜி., கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர், அந்த வசதிக்கு மூன்று மாதங்களுக்குள் மாற வேண்டும்; மறுப்பு தெரிவிக்கும் நுகர்வோருக்கு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்.

பி.என்.ஜி., வசதி இல்லாத கிராமப் பகுதிகளில் மட்டும், எல்.பி.ஜி., எனப்படும் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்படாது. சமையல் காஸ் வலையமைப்பை விரிவாக்கம் செய்யவும், காஸ் சிலிண்டரை மட்டுமே நம்பி இருக்கும் நிலையை குறைக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

பி.என்.ஜி., வசதிக்கு நுகர்வோர் மாறும் வகையில், அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எளிதாக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் பி.என்.ஜி., இணைப்புக்கான அனுமதியை, மூன்று வேலை நாட்களுக்குள் வழங்க வேண்டும்; தவறினால், ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும். நுகர்வோருக்கு ஒப்புதல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள், பி.என்.ஜி., இணைப்பு வழங்க வேண்டும்.

அனுமதி கிடைத்த நான்கு மாதங்களுக்குள், சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் உடனடியாக எரிவாயு எடுத்து செல்லும் குழாய் பதிப்பு பணிகளை முடிக்க வேண்டும்; இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

இந்த பணிகளை கண்காணிக்க, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் குறைதீர்ப்பு முகமையாக நியமிக்கப்படுகிறது.

பி.என்.ஜி., வசதி ஏற்படுத்த முடியாத பகுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.என்.ஜி., என்பது நிலத்தடியில் குழாய்கள் பதித்து அதன் வழியாக  நம் வீட்டின் சமையல் அறைக்கே நேரடியாக எரிவாயுவை கொண்டு வரும் திட்டம். நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது.

வீடுகளில் குழாயில் நீர் வருவது போல, சமையல் அறைக்கு எந்நேரமும் காஸ் வந்து கொண்டிருக்கும். மாதந்தோறும் சிலிண்டருக்கு பதிவு செய்வது போல, இதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தினால் போதும்.

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு அதிக அழுத்தத்துடன் நிரப்பப்பட்டு, லாரிகளில் ஏற்றி வருவதன் மூலம் வினியோக தொடரில் கால தாமதம் ஏற்படுகிறது. ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு கொண்டு செல்வதற்கு, எரிபொருள், வேலையாட்கள் என, பல்வேறு செலவுகளும் ஏற்படுகின்றன.

தேவையற்ற செலவுகளை குறைக்கவும், தற்போது உள்நாட்டில் பி.என்.ஜி., காஸ் உற்பத்தி அதிகரித்து இருப்பதாலும், பொதுமக்களை குழாய் வழி காஸ் இணைப்புக்கு மாறும்படி, மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.

மேலும், நகர் பகுதிகள் பி.என்.ஜி.,க்கு மாறுவதால், அதற்கான காஸ் சிலிண்டர்கள் அனைத்தும், அந்த வசதி இல்லாத கிராமப் பகுதிகளுக்கு எளிதாக மடை மாற்ற முடியும். இதனால், வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் நீங்கும் என மத்திய அரசு கருதுகிறது

எல்.பி.ஜி., வினியோகம் அர்ஜென்டினா உதவி

சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி., வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்தாண்டில் மார்ச் வரை, 50,000 டன் எல்.பி.ஜி., ஏற்றுமதி செய்துள்ளது. அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா துறைமுகத்தில் இருந்து 20,000 கடல் மைல் துாரம் கடந்து, குஜராத்தின் தஜே துறைமுகத்துக்கு எரிவாயு வந்து சேர்ந்துள்ளது. போர் துவங்குவதற்கு முன்னரே, இறக்குமதியை மத்திய அரசு பரவலாக்கி உள்ளது.

குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற வினியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்