அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு இறுதியாகிறது!
23 பங்குனி 2026 திங்கள் 12:30 | பார்வைகள் : 291
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக, இன்று சென்னை வரும் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பீயூஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசுகிறார். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை விட, கூடுதலாக பெறுவதில் தமிழக பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னும் வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., கட்சிகளுக்கு தான் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, 12 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது; அக்கூட்டணி, 18.28 சதவீத ஓட்டுகளை வாங்கியது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் 40 தொகுதிகளில் போட்டியிட, பா.ஜ., முடிவு செய்தது.
மேலும், பல ஆண்டுகளாக தன்னுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளையும், தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்து, 50 தொகுதிகளில் களமிறங்க பா.ஜ., திட்டமிட்டது. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பழனி சாமியுடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்திஉள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பழனிசாமி கடந்த வாரம் டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அ.தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகள் தொடர்பாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை, அ.தி.மு.க., இன்று அதிகாரப்பூர்வமாக துவக்குகிறது. இதற்காக, மத்திய அமைச்சரும், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல், இன்று காலை 9:50 மணிக்கு சென்னை வருகிறார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று, இன்று மதியம் பழனிசாமியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கிறார்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய உள்ளார். ஒவ்வொரு கட்சியாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அ.தி.மு.க.,விடம் 50 தொகுதிகள் வரை பா.ஜ., தரப்பில் கேட்கப்பட்ட நிலையில், 25 தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்தது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதை விட கூடுதலாக பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என, அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, 29 தொகுதிகளை ஒதுக்குவதாக அ.தி.மு.க., தெரிவித்துள்ளது. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்பதால், 40 தொகுதிகள் வரை பா.ஜ., கணக்கில் சேரும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan