Paristamil Navigation Paristamil advert login

‘பேர்ல் ஹார்பர்’ தாக்குதல் ஜப்பான் பிரதமரை சங்கடப்படுத்திய ட்ரம்ப்

‘பேர்ல் ஹார்பர்’ தாக்குதல்  ஜப்பான் பிரதமரை சங்கடப்படுத்திய ட்ரம்ப்

21 பங்குனி 2026 சனி 08:11 | பார்வைகள் : 385


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பேர்ல் ஹார்பர் தாக்குதல் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, ஜப்பான் பிரதமரை சங்கடமான நிலைக்கு தள்ளியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, முக்கிய கனிம வளங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பின் ஆரம்பத்தில், ஜப்பான் பிரதமரின் ஆங்கிலத் திறனைப் பாராட்டிய டிரம்ப், மொழிபெயர்ப்பின்றி உரையாடுவது குறித்து நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார். “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை என்பது மிகவும் நன்றாக உள்ளது,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “அடுத்த முறை உங்கள் மொழியில் பேச முயற்சிப்பேன்” என்ற விளையாட்டுத்தனமான குறிப்பும் இடம்பெற்றது. இந்த கட்டத்தில், சந்திப்பு இயல்பான மற்றும் நட்பான சூழலில் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்பாக நட்பு நாடுகளுக்கு ஏன் முன்னறிவிப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, டிரம்ப் உரையின் திசையை மாற்றினார்.

“நாங்கள் யாருக்கும் முன்னதாகச் சொல்லவில்லை, ஏனெனில் எங்களுக்கு திடீர் தாக்குதல் தேவைப்பட்டது. திடீர் தாக்குதல் பற்றி ஜப்பானை விட வேறு யாருக்குத் தெரியும்?” எனக் கூறிய அவர், பின்னர் ஜப்பான் பிரதமரை நோக்கி “நீங்கள் ஏன் பேர்ல் ஹார்பர் குறித்து எங்களிடம் சொல்லவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கருத்து, அங்கு இருந்தவர்களிடையே சங்கடமான அமைதியை ஏற்படுத்தியதுடன், ஜப்பான் பிரதமர் அதற்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. வரலாற்று உணர்வுகள் தொடர்பான விஷயங்களில் தலைவர்கள் பயன்படுத்தும் மொழி மற்றும் அணுகுமுறை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1941 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி, ஜப்பான் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள பேர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தை திடீரெனத் தாக்கியது. இந்த தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாக இணைந்ததுடன், 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டதன் பின்னர் ஜப்பான் சரணடைந்தது.

இந்நிலையில், தற்போதைய உலக அரசியல் பதற்றங்களின் மத்தியில், இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவது சர்வதேச உறவுகளில் நுணுக்கமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் அமெரிக்கா – ஜப்பான் உறவுகளின் நுட்பமான தன்மையையும், உலக அரசியல் மேடையில் உரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.