Paristamil Navigation Paristamil advert login

11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

21 பங்குனி 2026 சனி 09:52 | பார்வைகள் : 236


மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ உள்பட 11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வளைகுடா நாடுகளில் ஈரான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, துபாய், ஓமன் போன்ற நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களின் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிவில் விமானப் போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதைய போர் காரணமாக,11 நாடுகளின் வான்வழியை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், யுஏஇ , கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளின் வான்வழியை மார்ச் 28ம் தேதி வரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளின் வான்பரப்பில் பறக்கும்போது, விமானங்கள் கடல் மட்டத்திலிருந்து 32,000 அடி உயரத்திற்குக் கீழே பறக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு வான்வழி கட்டுப்பாடுகள் குறித்து உடனுக்குடன் தகவல்களை வழங்கும் நோட்டம் (NOTAM) அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கும் விமானங்கள் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.