Paristamil Navigation Paristamil advert login

கியூபாவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை - கனடா விடுத்த பயண எச்சரிக்கை

கியூபாவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை - கனடா விடுத்த பயண எச்சரிக்கை

13 மாசி 2026 வெள்ளி 06:25 | பார்வைகள் : 271


கியூபாவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விமான சேவை சிக்கல்களை முன்னிட்டு, கனடா அரசு அந்நாட்டிற்கு செல்லும் பயணிகள் குறித்து அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், கியூபாவிற்கு அவசியமற்ற (non-essential) அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது அந்நாட்டில் தங்கியிருக்கும் கனடியர்கள், வர்த்தக விமான சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கும் வரை உடனடியாக தாயகம் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கியூபாவின் பல விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகம் நம்பகமற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட்ஜெட் (WestJet), ஏர் கனடா (Air Canada), ஏர் டிரான்சாட் (Air Transat) உள்ளிட்ட முக்கிய கனடிய விமான சேவைகள் கியூபாவிற்கு செல்லும் தங்களது வர்த்தகப் பயணங்களை இடைநிறுத்தியுள்ளன.

வெஸ்ட்ஜெட் நிறுவனம், கியூபாவில் உள்ள கனடியர்களை பெப்ரவரி 17க்குள் பாதுகாப்பாக மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சில திட்டமிட்ட விமானங்கள் மாற்றப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டோ டொராண்டோ வழியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவில் உள்ள கனடியர்கள், வர்த்தக விமானங்கள் கிடைக்கும் வரை நாடு திரும்புமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் அனிதா ஆனந்த் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடியர்களை மீள அழைத்துவர விமான நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்