அ.தி.மு.க.,வுக்கு தாவும் அழகிரி ஆதரவாளர்கள்!
13 மாசி 2026 வெள்ளி 13:44 | பார்வைகள் : 997
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள், ஜெயலலிதா பிறந்த நாளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சிக்கு மாற உள்ளனர்.
கடந்த 2014ல், மதுரையில் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன், தன் வீட்டுக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம், 'என் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என அழகிரி வலியுறுத்தினார்.
ஆனால், கட்சியில் சேர்க்காததால், இனியும் தி.மு.க.,வை நம்பியிருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என முடிவுக்கு வந்த அழகிரியின் ஆதரவாளர்கள், தொழிலதிபர் ஒருவர் வாயிலாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தினர். அவரும் கிரீன் சிக்னல் கொடுத்ததால், ஜெ., பிறந்த நாளில், பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைகின்றனர்.
அழகிரி ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:
வேறு கட்சிகளுக்கு சென்ற யாரையெல்லாமோ, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கிறார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதை மறந்து, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால், 12 ஆண்டுகளாக மாற்றுக் கட்சிக்கு செல்லாமல், தி.மு.க., விசுவாசிகளாக தொடரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
மதுரை தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, சில நாட்களுக்கு முன் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, அமைப்பு செயலர் பாரதியை அழைத்த ஸ்டாலின், 'கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து மாவட்டச் செயலர் தளபதியிடம் பேசுங்கள்' என கூறினார்.
அண்மையில் மதுரை வந்த ஸ்டாலினை, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் அளித்தார். ஆனாலும், மீண்டும் சேர்ப்பதற்கான அறிகுறி இல்லை. தற்போது அ.தி.மு.க.,வுடன் நாங்கள் பேசுவது உண்மை. அழகிரி சம்மதமின்றி செல்ல மாட்டோம். சட்டசபை தேர்தலுக்குள் முக்கிய முடிவு எடுப்போம். இவ்வாறு கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan