Paristamil Navigation Paristamil advert login

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாட்களாக காத்திருக்கிறோம்; கிரிஷ் சோடங்கர்

11 மாசி 2026 புதன் 11:56 | பார்வைகள் : 291


தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி இருக்கிறார்.

தமிழகத்தில் அதிமுக பாஜவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது. திமுகவும் மாவட்டங்கள்தோறும், மண்டலங்கள் தோறும் மாநாடுகள், கூட்டங்களை அறிவித்து, களப்பணியில் இறங்கி இருக்கிறது. ஆனால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கான 5 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து திமுகவுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளது. ஆனால், 70 நாட்களாகியும் கூட்டணி விவகாரம், தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எந்த முன்னேற்றம் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இந் நிலையில், தமிழுகம், பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டார். ஆலோசனைக்கு பின்னர், அவர் அளிதத பேட்டி;

கூட்டணி விவகாரத்தில் குழப்பம் காங்கிரசிடம் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நிர்வாகிகள் யாருக்கிட்டேயும் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் பணிக்குழு, இந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை குழு இன்னும் நியமிக்கப்படவில்லை என்று தான் எல்லோரும் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டு இருந்தனர்.

காங்கிரஸ் தலைவரின் வேதனை என்னவென்றால் கடைசி நேரத்தில் களப்பணிக்குச் செல்லும் விஷயத்தில் எங்களுக்கு நிறைய படிப்பினை உண்டு. பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் கடைசி நிமிடத்தில் எதுவும் பங்ணணமுடியாமல் போய்விட்டது.

இந்த அனுபவத்தை வைத்து முன்னதாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு யாருக்கு என்னனென்ன தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ? 234 தொகுதிகளிலும் பணியாற்ற வேண்டும். அதில் சில சங்கடங்கள் இருப்பதாக எல்லாரும் இன்றைக்கு கூட்டத்தில் பேசினார்கள். திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினிடம் எங்களின் கோரிக்கை என்னவென்றால் உடனடியாக பேச்சுவார்த்தை கமிட்டியை அமைக்க வேண்டும் என்பதுதான் ராகுலின் கருத்து .

அடுத்த கட்டமான தேர்தல் களத்திற்கு சென்றுவிட வேண்டும். தேர்தல் களத்தில் போய் நிற்க வேண்டும். ஆகையால் கடைசி நேரத்தில் சென்று தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கி முன்பே முடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தலைவர்களின் விருப்பம்.

எங்களின் இந்த வருத்தம் காங்கிரஸ் தலைமையிடம், ராகுலிடம் இருக்கா என்று சொல்ல முடியாது. எல்லாத்தையும் சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையே இன்னமும் ஆரம்பிக்கவில்லையே? தலைவர்கள் (ராகுல், கார்கேவை கூறுகிறார்) என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் நாளைக்கே போய் சொல்வோம்.

தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் பயணத்திட்டம், கார்கே பயணத்திட்டம், காங்கிரஸ் தேசிய தலைவர்கள பயணத்திட்டம் என அனைத்தும் ரெடி. நாங்க ரெடி. பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு பின்னர்தானே பிரசாரத்திற்கு அழைத்துக் கொண்டு வரமுடியும்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ஒரு வாரம் கூட நேரம் அளிக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் (கூட்டணி பேச்சுவார்த்தை+தொகுதிகள் பங்கீட்டை குறிப்பிடுகிறார்) அதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாது. சீக்கிரம் முடிக்க வேண்டியது என்பது எல்லோருடைய அபிப்பிராயம்.

இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி விவரம்;

தமிழ்நாடு காங்கிரசை பொறுத்தவரையில் நாங்கள் மிக தெளிவாக உள்ளோம். கடந்தாண்டு நவம்பரில் காங்கிரஸ் தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான கமிட்டி அமைத்தார். இந்த கமிட்டியில் 5 பேர் உள்ளனர். டிசம்பர் 3ம் தேதி இந்த கமிட்டியினர் சென்று முதல்வர் ஸ்டாலினை பார்த்தனர்.

இந்த கமிட்டி அமைக்கப்பட்டு 70 நாட்களாகிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம் என்று தெளிவாக தெரிந்தால் தான் தேர்தல் பணிகளுக்கு தயாராக முடியும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் (திமுகவை குறிப்பிடுகிறார்) இன்னமும் குழு அமைக்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

எங்கள் தொண்டர்கள் மிகுந்த வலியுடன் உள்ளனர். தமிழகத்தில் உள்ள எங்களின் கட்சி தலைவர்களும் வருத்தத்தில் இருக்கின்றனர். ஏன் இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்று தொண்டர்கள் திரும்ப, திரும்ப எங்களிடம் கேட்டுக் கொண்டே ,இருக்கின்றனர்.

நாங்கள் காலதாமதம் செய்வது போன்று தோற்றம் தருகிறது. நாங்கள் தாமதம் செய்யவில்லை. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போதிய நேரம் தேவை. ஏன் என்னமும் இந்த பேச்சுவார்த்தை தொடங்கவில்லை, தாமதத்திற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை.

இந்த விஷயத்தில் நாங்கள் யார் மீதும் குறை சொல்லவில்லை, பழியும் சொல்லவில்லை. 70 நாட்களாக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்ற நிலைமையை மட்டுமே சொல்கிறோம். பேச்சுவார்த்தை கமிட்டி உறுப்பினர்கள் எல்லாரும் இப்போது உங்கள் முன்னே தான் நின்று கொண்டு இருக்கின்றனர். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டோம், வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். ஏன் மிக விரைவில் இது (கூட்டணி பேச்சுவார்த்தை) அவசியமாகிறது என்பதையும் கூறி இருக்கிறோம்.

அவர்கள்(திமுக) ஆர்வமாக உள்ளார்களா, இல்லையா என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்