Paristamil Navigation Paristamil advert login

மௌனம் குற்றவாளிகளுக்கு துணை - பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் சமூகத்தின் பங்கு என்ன?

மௌனம் குற்றவாளிகளுக்கு துணை - பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் சமூகத்தின் பங்கு என்ன?

7 மாசி 2026 சனி 14:24 | பார்வைகள் : 176


இலங்கையின் அன்றாட வாழ்வாதாரச் சக்கரத்தில் பொதுப் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. ஆனால், அந்தச் சக்கரம் சுழலும் பாதையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் வெறும் 'அசௌகரியங்கள்' அல்ல; அவை அடிப்படை மனித உரிமை மீறல்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பது கசப்பான உண்மை.

இப்பயணங்கள் அனைவருக்கும் சமமான பாதுகாப்பையும் மனநிறைவையும் தருகிறதா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக, பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், அண்மைக்கால நிகழ்வுகள் ஆண்களும் சில நெருக்கடிகளுக்கு உள்ளாவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: உண்மை நிலை

பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் 'பாலியல் சீண்டல்கள்' (Harassment). நெரிசல் மிகுந்த பேருந்துகள் மற்றும் ரயில்களில் வேண்டுமென்றே உரசுவது, தவறான சைகைகள் மற்றும் ஆபாசப் பேச்சுகள் இன்றும் தொடர்கின்றன. இது பெண்களுக்கு ஒருவித அச்சத்தையும், பொது இடங்களுக்கு வருவதற்கான தயக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் சுமார் 90 வீதமானோர் பல்வேறு வகையான வன்முறைகளுக்கும் தொந்தரவுகளுக்கும் உள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், சமூகக் கட்டமைப்பு மற்றும் அவமானங்களுக்குப் பயந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மௌனம் காப்பதே கசப்பான உண்மையாக உள்ளது.

2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 90 வீதமான இலங்கைப் பெண்கள் பொதுப் போக்குவரத்தின் போது வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் வெறும் 4 வீதமானோர் மட்டுமே பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். பெரும்பாலான முறைப்பாடுகள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்படாததால், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை விடவும் கள யதார்த்தம் மிகவும் தீவிரமாக உள்ளது.

மௌனத்தை உடைக்கும் ஒரு குரல்

அண்மையில் "அவசர தேவை நிமித்தம் மட்டக்களப்பிற்கு இரவு நேரப் பேருந்தில் தனியாகப் பயணிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது," எனத் தனது கசப்பான அனுபவத்தைப் பகிர்கிறார் பல்கலைக்கழக மாணவி ஒருவர்.

"இரவு 9.45 மணிப் பேருந்து. கடும் நெரிசலில் எனக்கு அருகில் அமர்ந்த நபர், நான் அயர்ந்து தூங்கிய தருணத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுத் தீண்ட முயன்றார். நான் தற்காத்துக் கொண்டும் அவர் தனது அநாகரீகத்தை நிறுத்தவில்லை. மௌனமாக இருந்தால் அவருக்குத் துணிச்சல் கூடும் என்பதை உணர்ந்து, பயத்தைத் தாண்டி சத்தமிட்டேன்.

நடத்துனரிடம் முறைப்பாடளித்தபோது அவர் அந்த நபரை திட்டி முன்னால் சென்று நிற்குமாறு மட்டுமே கூறினார். மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், சக பயணிகள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருவர்கூடத் தட்டிக்கேட்க முன்வரவில்லை. 'பெண்களுக்கு ஏன் இரவுப் பயணம்?' எனக் கேள்வி கேட்பதை விடுத்து, 'ஏன் இந்தப் பாதுகாப்பு அற்ற சூழல்?' எனச் சமூகம் சிந்திக்க வேண்டும்," என்கிறார் அவர்.

இது பெண்களுக்கு மட்டுமானதா?

பாதிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற பிம்பம் மெல்ல மாறி வருகிறது. அண்மையில் கேரளாவில் ஒரு பெண், தனது சமூக வலைத்தளத்தில் 'பிரபலமாக வேண்டும்' என்பதற்காக, ஒரு இளைஞர் தன்னிடம் தவறாக நடந்ததாகப் பொய்க் குற்றம் சாட்டினார். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதும், பின்னாளில் அந்தப் பெண் சட்டப்படி தண்டிக்கப்பட்டதும் ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் 2012ஆம் ஆண்டில் இந்தியாவில் 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர் பேருந்தில் வைத்து ஒரு குழுவினரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்:

⦁பெண்கள்: உடல் ரீதியான மற்றும் வாய்மொழிச் சீண்டல்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

⦁ஆண்கள்: கூட்ட நெரிசலில் தவறுதலாகக் கை பட்டால் கூட, அது தவறாகச் சித்திரிக்கப்பட்டு விடுமோ என்ற 'சமூகப் பயம்' மற்றும் 'பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு' ஆளாகிறார்கள்.

⦁பால்புதுமையினர் : இவர்களும் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றனர்.

இது பெண்கள் சார்ந்த பிரச்சினை மட்டுமா?

பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்றாலும், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இத்தகைய பாதுகாப்பற்ற சூழலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம், எல்லா ஆண்களையும் குற்றவாளிகளாகப் பார்ப்பது தவறு. சக பயணி ஒருவருக்கு அநீதி இழைக்கப்படும்போது தட்டிக் கேட்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.

"எல்லா ஆண்களும் அப்படி இல்லை" (Not all men) என்ற வாதத்தை விட, "ஏன் ஒரு சில ஆண்களால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது?" என்பதே இங்கு முக்கியம். சில சந்தர்ப்பங்களில் ஆண்களும் திருட்டு அல்லது வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் பாலியல் ரீதியான சீண்டல்களில் பெண்களே பிரதான இலக்காகின்றனர்.

பின்னணியில் உள்ள காரணங்கள்

1.தண்டனை பற்றிய பயமின்மை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம்.

2.கண்காணிப்புக் குறைபாடு: பேருந்துகள் மற்றும் ரயில் நிலையங்களில் போதிய CCTV கேமராக்கள் அதிகளவில் பயன்பாடுகளில் இல்லாமை.

3.மௌனம்: சக பயணிகள் கண்டும் காணாமல் கடந்து செல்வது குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது.

கேரளா சம்பவம்: உடைக்கப்படும் பிம்பங்கள்

கேரளாவில் நடந்த அந்தச் சம்பவம், நாம் இவ்வளவு காலமும் கட்டமைத்து வைத்திருந்த "பாதிப்பு" குறித்த பிம்பங்களை உடைத்து நொறுக்கியுள்ளது. அந்தப் பெண் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், சமூக வலைத்தளப் பிரபல்யத்திற்காகச் சுமத்தப்பட்ட ஒரு பொய்க் குற்றச்சாட்டு, ஒரு உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், உண்மையாகப் பாதிக்கப்படும் பெண்களின் குரல்களையும் பலவீனப்படுத்தியுள்ளது.

வருங்கால மாற்றத்திற்கான தீர்வுகள்

இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கச் சில காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்:

⦁இரகசியக் கண்காணிப்பு: போக்குவரத்து நெரிசலில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிய சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகளை (Undercover Officers) நியமித்தல்.

⦁தொழில்நுட்ப உதவி: அவசர காலங்களில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ள 'Panic Button' அல்லது மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்துதல்.

⦁சமூகப் பொறுப்பு: ஒரு பெண் பாதிக்கப்படும்போது மற்றவர்கள் குரல் கொடுத்தாலே பாதி குற்றங்கள் குறையும்.

⦁உள்கட்டமைப்பு: நிலையங்களில் போதிய வெளிச்சம் மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல்.

சட்டப் பாதுகாப்பு மற்றும் உதவிகள்

இலங்கைச் சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

⦁தண்டனை சட்டக்கோவை (Penal Code): பிரிவு 345-இன் கீழ், பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு குற்றவியல் செயலாகும். இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

"உங்களுக்குத் தெரியுமா? - நீதியைப் பெறத் தயங்காதீர்கள்!"

பயணத்தின் போது நீங்கள் ஏதேனும் அநீதியையோ அல்லது பாலியல் சீண்டல்களையோ சந்தித்தால், உடனடியாக மௌனத்தைக் கலைந்து குரல் கொடுங்கள். உங்கள் உதவிக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் பின்வரும் இலக்கங்களை வழங்கியுள்ளனர்:

⦁பொலிஸ் அவசர எண்: 119

⦁பெண்கள் உதவி எண்: 1938

⦁ரயில்வே அவசர மற்றும் முறைப்பாடு எண்: 1971 / 1955

⦁தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC): 1955

⦁பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்: 0112 444 444

உங்கள் முறைப்பாடு ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதோடு, மற்றுமொரு பயணி பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவும். போக்குவரத்து என்பது ஒருவரின் இலக்கை அடையும் பயணம் மட்டுமல்ல; அது ஒரு குடிமகனின் கௌரவமான உரிமை. தவறு செய்பவர்கள் சிறு சதவீதத்தினரே என்றாலும், அந்தச் சிறு பகுதியினர் ஒட்டுமொத்தப் பயணத்தையும் அச்சமானதாக மாற்றுகின்றனர். ஆண்களும் பெண்களும் இணைந்து ஒரு பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதே நாகரீக சமூகத்தின் அடையாளம்.

நன்றி virakesari

 

வர்த்தக‌ விளம்பரங்கள்