Paristamil Navigation Paristamil advert login

திருப்பதி லட்டு குறைபாடு ஆய்வு! தனிநபர் கமிஷன்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு

திருப்பதி லட்டு குறைபாடு ஆய்வு! தனிநபர் கமிஷன்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு

6 மாசி 2026 வெள்ளி 12:19 | பார்வைகள் : 626


திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை, ''கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய பாவம்,'' எனக் குறிப்பிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை தொடர்ந்து, குறைபாடுகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க தனிநபர் கமிஷன் அமைக்கப்படும்,'' என, தெரிவித்தார்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, 2019 - 24 மே வரை முதல்வராக பதவி வகித்தார்.

ஆதாரம் இல்லை

அப்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக, பதவியேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, 15 மாதங்களாக விசாரித்த சி.பி.ஐ., தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு, கடந்த மாதத்தில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், 'லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நெய்க்கு பதிலாக, பாமாயில் போன்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சி.பி.ஐ.,யின் குற்றப்பத்திரிகையை மேற்கொள்காட்டி, அவரை ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பரிந்துரை

இந்நிலையில், அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அளித்த பேட்டி:

கடந்த 2024ல் முதல்வராக பதவியேற்றதும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை துாய்மைப்படுத்தும் நடவடிக்கையாக, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரிகள், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்துக்கு அனுப்பப்பட்டன.

இதை ஆய்வு செய்த வாரியம், நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தெரிவித்தது. இதன் அடிப்படையிலேயே, நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறினேன். இதுகுறித்து விசாரித்த சி.பி.ஐ., நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்றும், பாமாயில் போன்ற எண்ணெய் கலக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சிலர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

பாவம்

இந்த விவகாரத்தில், குறைபாடுகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கை எடுக்க தனிநபர் கமிஷன் அமைக்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் தகவல்கள் கிடைத்தால் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.  

நெய் கலப்படத்தில் ஈடுபட்டதன் மூலம், ஜெகன் மோகன் ரெட்டி கடவுளுக்கு எதிராக மிகப்பெரிய பாவத்தை செய்து விட்டார். திருப்பதி ஏழுமலையான் என் குடும்பத்தின் குல தெய்வம். 2003ல், நக்சல்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் இருந்து அவர் தான் என்னை காப்பாற்றினார். இவ்வாறு அவர் கூறினார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்