Paristamil Navigation Paristamil advert login

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

5 மாசி 2026 வியாழன் 07:22 | பார்வைகள் : 722


துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பல்கலை துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து, தானே எடுத்துக் கொள்ளும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் பான்ஞ்சோலி ஆகியோர் முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வானது ஏன் இந்த சட்டங்களை தடுத்து நிறுத்த அவசரமாக செயல்பட்டது' என்று கேள்வி எழுப்பினர். அவர்கள் மேலும் கூறியதாவது;

தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், மாநில அரசுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காகவே தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டு, புதிய விசாரணைக்காக இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான ஒரு அமர்வு முன்பு இந்த வழக்குகள் பட்டியலிடப்பட வேண்டும். வழக்கை 6 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெறும் வரை, வேறு எந்த புதிய நியமனங்களை செய்ய மாட்டோம் என்று தமிழக அரசின் உறுதிமொழியையும் இங்கு பதிவு செய்கிறோம். மேலும், ஐகோர்ட் அமர்வானது இந்த வழக்கில் தெரிவித்த கருத்துகளையும் ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்