Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,-காங்., கூட்டணி அமையுமா? இன்று முடிவு!

தி.மு.க.,-காங்., கூட்டணி அமையுமா? இன்று முடிவு!

3 பங்குனி 2026 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 266


தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை வெளியிட, தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது. தி.மு.க., குழுவினரிடம், காங்கிரஸ் குழுவினர் நடத்திய சமீபத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் கேட்கப்படும் 41 தொகுதிகளுக்கு பதிலாக, 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என தி.மு.க., தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் கூட்டணி பற்றி கருத்து கேட்டு, தன்னிடம் கூறுமாறு, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், வேணுகோபால் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்; ஒவ்வொருவரிடம் கூட்டணி குறித்து கருத்து கேட்டுள்ளார். அவற்றை தொகுத்து, ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஒன்பது பேரில், நான்கு பேர் மட்டும், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஐந்து பேர், த.வெ.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தனர்.

மொத்தமுள்ள 17 எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேர் மட்டும் தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 11 பேரும், டில்லி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருக்கின்றனர்.

இது குறித்து, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: \u003c/b\u003eஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட், உள்ளாட்சிகளில் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை, தி.மு.க.,விடம் முன்வைத்துள்ளோம். 'ஆட்சியில் பங்கு தர மாட்டோம்; 25 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் தருகிறோம்' என சொல்கின்றனர்.

உள்ளாட்சி பதவிகளில் ஒதுக்கீடு குறித்து, சட்டசபை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என தி.மு.க., குழு தெரிவித்து விட்டது. எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால், முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை, ராகுல் தவிர்த்தார். அவரை வலுக்கட்டாயமாக வாழ்த்து சொல்ல வைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் முயற்சித்தார்.

அதன்படி, காங்கிரஸ் தலைவர் கார்கே பேசிய பின், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ராகுலுக்கு நன்றி தெரிவித்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'சகோதரர் ராகுல்' என குறிப்பிடுவதை தவிர்த்து விட்டார்.

இதையடுத்து, 'இன்ஸ்டாகிராம், எக்ஸ்' வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலினை பின்தொடர்வதை, நேற்று ராகுல் நிறுத்தி விட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில் ராகுலும், வேணுகோபாலும் பங்கேற்றனர்.

சென்னையில் இருந்து சென்ற த.வெ.க., நிர்வாகி ஒருவர், அங்கு ராகுலையும், வேணுகோபாலையும் சந்தித்து பேசியுள்ளார். த.வெ.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 78 தொகுதிகள், 10 அமைச்சர், ஒரு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார்.

கேரளம், புதுச்சேரி தேர்தலில் காங்கிரசுக்கு த.வெ.க., முழு ஆதரவு அளிக்கும் என்றும், அம்மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக விஜய் தீவிர பிரசாரம் செய்யவும் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.  

இதையடுத்து, தி.மு.க., தன் முடிவை இன்று இரவுக்குள் அறிவிக்க வேண்டும் என, காங்கிரஸ் கெடு விதித்துள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான தன் முடிவை தி.மு.க., வெளியிடவில்லை என்றால், த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் வீட்டில் ஆலோசனை

தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சில் சுமுக முடிவு எட்டப்படாததால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் தொடருவதை, காங்., நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இதனால், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க., தரப்பில் கடுமையாக முயற்சிகள் நடந்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கனிமொழி ஆகியோர் தொடர்ச்சியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்தித்து பேசி வருவதால், கூட்டணி பேச்சை வெளிப்படையாக செய்ய முடியவில்லை.

தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தலைமையிலான குழு, தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து சமீபத்தில் பேசியது. அப்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தி.மு.க., சொன்னதால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தியான காங்., மேலிடம், த.வெ.க.,வுடன் மீண்டும் பேச்சை துவங்கியுள்ளது. அதன்படி, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பிப்., 28-ம் தேதி டில்லி சென்று, காங்., மூத்த தலைவர் சிலரை சந்தித்து பேசினார்;

தொடர்ந்து, மார்ச் 1ம் தேதி ஹைதராபாத் சென்றார். ஆந்திராவில் இருந்து அங்கு வந்த காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரையும் ஹோட்டலில் சந்தித்து பேசினார். இதனால் தான், மார்ச் 1ம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ஆதவ் பங்கேற்கவில்லை. அப்போது, வேணுகோபாலுக்கு போன் செய்த மாணிக்கம் தாகூர், அவருடன் ஆதவ் அர்ஜுனாவை பேச வைத்துள்ளார். 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்.,கில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை பெற தலைமையும் விரும்புகிறது. ஆனால், 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் மூலமாக, ராகுலுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது. தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால், நிச்சயம் தலைமையும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பச்சைக்கொடி காட்டி விடும். எனவே, ஓரிரு நாட்கள் எங்களுக்காக காத்திருங்கள்' என வேணுகோபால் கூறியுள்ளார். இந்த தகவலை சென்னை திரும்பிய ஆதவ், விஜயிடம் கூறி உள்ளார்.

எனவே, இது குறித்து ஆலோசனை நடத்த, நீலாங்கரை வீட்டில் இருந்து, பட்டினப்பாக்கம் வீட்டுக்கு விஜய் நேற்று சென்றார். அங்கு விஜய், ஆதவ், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரசுக்காக ஓரிரு நாட்கள் காத்திருக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026