Paristamil Navigation Paristamil advert login

அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்

அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்

27 மாசி 2026 வெள்ளி 10:42 | பார்வைகள் : 202


ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், விதிகளை மீறி 3500 கோடி ரூபாய் முதலீடு செய்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது.

இந்த விவகாரத்தில், அந்நிய முதலீட்டு விதிகளுக்கு புறம்பாக நிதியமைச்சர் சிதம்பரம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதற்காக, சிதம்பரத்தின் மகன்கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடான வகையில் பயன் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரம் மீது இந்த வழக்கை தொடர்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.இது மட்டுமின்றி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் 1.16 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதை கண்டறியப்பட்டுள்ளது.

இன்னொரு ஊழல் :

இதைப் போலவே இன்னொரு ஊழல் வழக்கும் சிதம்பரம் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக வெளிநாட்டு முதலீடு பெற்றது தொடர்பான இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் 65.88 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கிலும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மீது வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி கடிதங்களை, அமலாக்கத்துறை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த விவகாரம் சிதம்பரத்திற்கும், திமுக கூட்டணிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது