Paristamil Navigation Paristamil advert login

இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்

25 மாசி 2026 புதன் 11:32 | பார்வைகள் : 175


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  இன்று( பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது 101. வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.  கடந்த பிப்.,1 ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும்  சிகிச்சை பலனின்றி  இன்று மதியம் 1:55 மணிக்கு  அவர் காலமானதாக டாக்டர்கள் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வரலாறு

பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில்  1925 டிச.,26 ல்  ராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு 3வது மகனாக  பிறந்தவர் நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலையில் பள்ளியில் படித்த போது, பள்ளி ஆசிரியர் மூலம் பொது உடமைக் கருத்துகள் அறிமுகமானது.

18 வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவருக்கு கிளைச்செயலாளர் பதவி கிடைத்தது.பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை செய்யப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு 1958 ம் ஆண்டு ரஞ்சிதம் என்பவரை நல்லகண்ணு திருமணம் செய்து கொண்டார்.

25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக  இருந்தார். 13 ஆண்டுகள் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆகவும் இருந்துள்ளார்.  விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமை, கனிம வளக்கொள்கை்கு எதிரான போராட்டம் நடத்தி சிறை சென்றுள்ளார்.

80வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வசூலித்து கொடுத்தது. அதனை கட்சிக்கே திருப்பி கொடுத்தார். தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

மதுரையில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதனை எதிர்த்து, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவராக  இருந்த நல்லகண்ணு தலைமையில்  உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

2010ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்த ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நல்லகண்ணு நேரில் ஆஜராகி வாதாடினார்.

தேர்தல் களம்

1999 லோக்சபா தேர்தலில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டு பாஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.

விருது

2007 ஆக.,14ல் சகாயோகி விருதை அப்போதைய கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் இருந்து வாங்கினார்.  

2007 ல் அம்பேத்கர் விருது

மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது( 2009 ஜன.,21)

தகைசால் தமிழர் விருது(2022)

ஆகியன நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்