Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

23 மாசி 2026 திங்கள் 07:15 | பார்வைகள் : 316


உத்தரபிரதேசத்தில் இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையையும், மீரட் மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உத்தரபிரதேசம் சென்ற பிரதமர் மோடி ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். டில்லி - மீரட் அதிவிரைவு ரயில் வழித்தடத்தின் முழு 82 கி.மீ பாதை கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இன்று இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனால் டில்லி- மீரட் அதிவிரைவு மெட்ரோ முழுமையாக இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,

இன்று முதல் முறையாக, ஒரே மேடையில் இருந்து, நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தேன். பாஜவின் இரட்டை இன்ஜின் அரசின் பணி கலாசாரத்தை பிரதிபலிக்கிறது.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்தை முடிக்க நாம் இரவும் பகலும் உழைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்ய முடியும் சூழல் நிலவியும் கூட கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இறுதி செய்ய முடியாத ஒரு காலம் இருந்தது.

இன்று, வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர். பாஜ நாட்டின் வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​5 நகரங்களில் மெட்ரோ இயக்கப்பட்டது.

அதே நேரத்தில் பாஜ அரசின் கீழ், மெட்ரோ சேவைகள் 25க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளன. 2014, 2019 மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களுக்கான எனது தேர்தல் பிரசாரத்தை நான் இங்கிருந்து தொடங்கியதால், மீரட் மக்களுடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சிறப்புகள் பின்வருமாறு:

* நமோ பாரத் ரயில் என்பது இந்தியாவின் அதிவேக ரயில் ஆகும். இது மணிக்கு 180 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது.

* தற்போது இந்த ரயில் 120-135 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. டில்லி-காஜியாபாத்-மீரட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

* நவீன வசதிகள்,  சுரங்கப்பாதை வசதி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பீக் ஹவரில் உச்சபட்ச நேரத்தில் 5-10 நிமிடங்களுக்கும், சாதாரண நேரத்தில் 10-15 நிமிடங்களுக்கும் ஒருமுறையும் நமோ பாரத் இயக்கப்படும்.

* மீரட் மெட்ரோ ரயில்கள் மூன்று பெட்டிகள் கொண்டவை. 173 இருக்கைகள் உட்பட மொத்தம் 700க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது.

* ஏசி பெட்டிகள், மெத்தை இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் போன்ற நவீன வசதிகள் உள்ளது.

* ஒரே வழிதடத்தில் இரண்டு இரு வேறு அதிவேக ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்