ஆட்சியில் பங்கில்லை! :காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கையை நிராகரித்தது தி.மு.க
12 தை 2026 திங்கள் 13:27 | பார்வைகள் : 156
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை, தி.மு.க., நிராகரித்துள்ளது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், 'தனித்தே அரசு அமைப்போம்; ஆட்சியில் பங்கில்லை' என, தி.மு.க., மூத்த அமைச்சர் பெரியசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என எழுந்த கலகக் குரல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்; அத்துடன், பெண்களை கவர, பொங்கலன்று இனிப்பான செய்தி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பெரும்பாலானோர், 'இம்முறை தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.
ரசிக்கவில்லை
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், தரவு பகுப்பாய்வு காங்கிரஸ் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் போன்றோர், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என, வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். இந்த கலகக் குரலை, தி.மு.க., ரசிக்கவில்லை.
இரு தரப்பினரும் சமூக வலைதளங்களிலும் மோதி வருகின்றனர். தி.மு.க., அதிக தொகுதிகளை தர மறுத்தால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்போம் என்பது, காங்கிரசில் ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. தி.மு.க., இல்லை என்றாலும், கூட்டணிக்கு கட்சிகள் இருப்பதால், இம்முறை நமக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பது, காங்கிரஸ் தலைவர்களின் எண்ணம்.
காங்கிரசுக்கு கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கொடுத்தால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்கும்.
தயக்கம்
எனவே, கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., தலைமை தயங்கி வருகிறது. அதனால், ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சிகளின் கனவை, ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.
அதை வெளிப்படுத்தும் விதமாக, தனித்தே அரசு அமைப்போம் என தி.மு.க., மூத்த அமைச்சர் பெரியசாமி அறிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
ஆட்சியில் பங்கு என காங்கிரசார் பேசி வருகின்றனர். கேட்பது அவர்களின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது, தி.மு.க.,வில் எப்போதுமே கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சி தான் நடக்கும்; கூட்டணி ஆட்சி எல்லாம் இருக்காது. இதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். சினிமா தணிக்கை வாரியம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக, முதல்வர் குற்றஞ்சாட்டியது உண்மையே. பொங்கலன்று பெண்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், இனிப்பான திட்டத்தை முதல்வர் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியில் பங்கு தரப்பட்டுள்ளது
அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு குறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி கூறியதாவது:
கடந்த 1952-ல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, 'காமன்வீல்' கட்சியின் தலைவர் மாணிக்கவேலரிடம் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அவர்கள் காங்கிரசில் இணைந்தனர். முதல்வர் ராஜாஜியின் அமைச்சரவையில் மாணிக்கவேலர் இடம் பெற்றார். காமராஜர் முதல்வரான போது, ராமசாமி படையாட்சி தலைமையிலான உழைப்பாளர் கட்சியில், 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அக்கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில், ராமசாமி இடம் பெற்றார்.
எனவே, ஆட்சியில் பங்கு தமிழகத்தில் நடக்கவில்லை என அமைச்சர் பெரியசாமி கூறுவது அபத்தமானது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan