Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி

இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி

11 தை 2026 ஞாயிறு 11:40 | பார்வைகள் : 159


குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை  கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை  கோவில் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது.

இதை நினைவு கூரும் வகையில் சோம்நாத் பெருமித திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார். கோவிலில் நேற்றிரவு அவர் சாமி தரிசனம் செய்தார்.


இன்று நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை அங்கு கூடியிருந்த மக்கள் வரவேற்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகளையும் பிரதமர் மோடி மேற்கொண்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி உடன் இருந்தனர். குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

நமது முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோம்நாத் கோவிலுக்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர். இந்த சூழ்நிலையும், இந்த சந்தர்ப்பமும் தெய்வீகமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். நான் உங்களுடன் உரையாடும் போது எனக்கு மீண்டும், மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சூழல் எப்படி இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோம்நாத் கோவிலில் கொடியேற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவின் சக்தியையும், திறன்களையும் முழு உலகிற்கு எடுத்துரைக்கிறது. கோவிலை அழித்ததன் மூலம் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகப் படையெடுத்தவர்கள் நினைத்தார்கள்.


ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது. சோமநாதரின் கதை இந்தியாவின் கதை. அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
 

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்