Paristamil Navigation Paristamil advert login

அனர்த்த தயார்நிலை என்பது தெரிவு அல்ல - அது கட்டாயம்

அனர்த்த தயார்நிலை என்பது தெரிவு அல்ல - அது கட்டாயம்

8 தை 2026 வியாழன் 11:08 | பார்வைகள் : 124


தித்வா கற்றுத்தந்த பாடம் யாதெனில் "தயார்நிலை என்பது ஒரு தெரிவு அல்ல, அது உயிர்வாழ்வதற்கான அவசியம்." அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் வரும் சீற்றங்களிலிருந்து தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியும்

இலங்கையை அண்மையில் உலுக்கி எடுத்த 'தித்வா' சூறாவளியானது, வெறும் இயற்கைச் சீற்றமாக மட்டும் வந்து செல்லவில்லை. அது ஒட்டுமொத்த தேசத்துக்கும் மறக்க முடியாத பல படிப்பினைகளைக் கற்றுக்கொடுத்துச் சென்றிருக்கிறது. இந்த அனர்த்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆழமானவை. 640 க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், ட்ரில்லியன் கணக்கான ரூபா சொத்துக்கள் அழிந்ததும், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் தயார் நிலை எங்கே நிற்கிறது என்பதைத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.

இயற்கைச் சீற்றங்களைத் தவிர்க்க முடியாவிட்டாலும், முறையான 'முன்னாயத்தம்' இருந்தால் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்பதே தித்வா நமக்கு உரக்கச் சொல்லும் மிக முக்கியமான பாடமாகும்.

உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க முடியுமா?

தித்வா புயலின் போது ஏற்பட்ட 600க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை.

எக்ஸ்பேர்ட் கொம்மன்ட்

அனர்த்தங்கள் நிகழும் போது சொத்துக்களையும் வீடுகளையும் காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் மனித உயிர்களைக் காப்பாற்றுவதே ஒரு நாட்டின் முதன்மையான கடமையாகும். முறையான முன்னெச்சரிக்கையும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் துரித நடவடிக்கையும் இருந்திருந்தால், பல குடும்பங்கள் இன்று தம் உறவுகளை இழந்திருக்காது. ஜப்பான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இதற்குக் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.

ஜப்பானில் அடிக்கடி சக்திவாய்ந்த சுனாமி மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அங்குள்ள அதிநவீன முன்னெச்சரிக்கை பொறிமுறை மற்றும் மக்களின் தயார்நிலை காரணமாக உயிரிழப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதேபோன்று, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஒரு காலத்தில் புயல்களால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தது. ஆனால் இன்று, அங்குள்ள 'பூச்சிய உயிரிழப்பு' (Zero Casualty) கொள்கையினால், மிகப்பாரிய புயல்களின் போதும் உயிர்ச்சேதம் மிகக்குறைவாகவே பதிவாகிறது. பங்களாதேஷில் 1970களில் ஏற்பட்ட புயலில் 5 இலட்சம் பேர் உயிரிழந்தனர், ஆனால் இன்று முறையான தகவல் தொடர்பு மற்றும் புகலிட மையங்கள் மூலம் அந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை தனது பாதுகாப்புப் பொறிமுறையில் இன்னும் பல தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

காலநிலைப் போரும் உணவுப் பாதுகாப்பும்

தித்வா புயல் என்பது ஒரு தனித்த நிகழ்வு அல்ல; அது உலகளாவிய காலநிலை மாற்றத்தின் கோர முகம். புவி வெப்பமடைதல் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்பாராத நேரங்களில் அதீத மழைவீழ்ச்சியை உருவாக்குகின்றன. இம்முறை இது இலங்கையின் முதுகெலும்பான விவசாயத் துறையை அடியோடு சிதைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் மற்றும் காய்கறித் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின்படி,காலநிலை மாற்றத்தினால் உலகளாவிய விவசாய உற்பத்தி சரிவைச் சந்தித்து வருகிறது. உலக வங்கியின் தரவுகளின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் மேலதிகமாக 132 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படக்கூடும். இலங்கையிலும் நெல் உற்பத்தி மற்றும் தேயிலை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எதிர்காலத்தில் பாரிய உணவுத் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த மக்களுக்கு, இது "மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய" கதையாக மாறியுள்ளது.

பொருளாதார இழப்பின் பாரதூரமான தாக்கம்

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள் இலங்கையின் மீட்சியை வெகுவாகப் பாதித்துள்ளன. உலக வங்கியின் தொழில்நுட்ப மதிப்பீட்டின்படி, நேரடிப் பௌதிகச் சேதங்களின் பெறுமதி மட்டும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும்.

மாவட்ட ரீதியாகப் பார்த்தால், கண்டி மாவட்டம் 689 மில்லியன் டொலர் இழப்புடன் முதலிடத்தில் உள்ளது. மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் உட்கட்டமைப்புகளைச் சிதைத்துள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) படி, சுமார் 374,000 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் நாட்டுக்கு மாதந்தோறும் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, நாட்டின் அந்நியச் செலாவணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை உற்பத்தியில் 35 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

தகவல் தொடர்புச் சங்கிலியில் ஏற்பட்ட முறிவு

தித்வா புயல் ஒரு தேசியப் பேரழிவாக மாறியதற்குத் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தாமதமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் நவம்பர் 12ஆம் திகதியே ஒரு தாழமுக்கம் உருவாகி வருவதைக் குறிப்பிட்டிருந்தது. நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் புயலின் தீவிரம் குறித்துத் தெளிவான கணிப்புகள் இருந்தும், அவை ஏன் உரிய நேரத்தில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும், அதன் ஊடாக அரசாங்கத்திற்கும் கொண்டு செல்லப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

நிபுணர்களின் கருத்துப்படி, நவம்பர் 26ஆம் திகதியே 'தேசியப் பேரனர்த்த நிலைமை' அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நவம்பர் 28ஆம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது போன்ற முடிவுகள் மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்தின. "அனைத்தும் ஏற்படுவதற்கு முன்னர் அதற்காகத் தயாராகுவது மிக முக்கியமானது. வீடுகளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், உயிர்களைக் காப்பாற்றலாம்" என்று பேராசிரியர் ரொஹான் சமரஜீவ குறிப்பிடுவது இங்கே கவனிக்கத்தக்கது. முறையான தகவல் தொடர்புச் சங்கிலி இருந்திருந்தால், இந்த 600 உயிர்களையும் நாம் காப்பாற்றியிருக்கலாம்.

பொறுப்புக்கூறலும் பொறிமுறையும்

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் மற்றும் அதற்கான தேசிய சபை போன்ற பலமான கட்டமைப்புகள் இருந்தும், உயிரிழப்பு ஏற்பட்டமை குறித்து முழுமையான விசாரணை அவசியம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்துகிறார். இந்தியா போன்ற நாடுகள் ஒரு வாரம் முன்பே எச்சரிக்கை விடுத்து மீட்புப் பணிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் இலங்கையில், அனர்த்தம் நிகழ்ந்த பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஒரு பலவீனமான போக்காகும்.

தேசிய கட்டடவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அங்கீகாரம் இன்றி மலையகப் பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்படுவது மற்றும் ஆபத்தான பகுதிகளில் மக்கள் குடியேறுவது போன்ற விடயங்கள் உயிரிழப்புகளை அதிகப்படுத்துகின்றன. கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளை வகைப்படுத்தி, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீள்குடியேற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

சர்வதேச உதவி

இக்கட்டான இத்தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகள் ஈடு இணையற்றவை. 'அயலகத்துக்கு முதலிடம்' என்ற கொள்கையின் கீழ், இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை அறிவித்துள்ளது. இந்தியக் கடற்படை மற்றும் வான்படை 'ஒப்பரேஷன் சாகர் பந்து' மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், கள மருத்துவமனைகள் மற்றும் தற்காலிகப் பாலங்களை அமைத்து மீட்புப் பணிகளில் முன்னின்றது.

அதேபோன்று, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் (JICA) போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஜனவரி 15-ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உலக வங்கியின் விரிவான அறிக்கை, இலங்கைக்குத் தேவையான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ள ஒரு பலமான அடித்தளமாக அமையும்.

காலநிலை நீதி மற்றும் எதிர்காலப் பாதை

இலங்கை உலகளாவிய கார்பன் உமிழ்வில் வெறும் 1.2 சதவீதத்தையே பங்களிக்கிறது. ஆனால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகமாகச் சுமக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. "இலங்கை குறைவாக உமிழ்வு செய்யும் போதும், புயல்கள் போன்ற அனர்த்தங்களுக்கு ஆளாகிறது. இதற்கான நட்டஈட்டை உலக காலநிலை நிதியத்திலிருந்தும், அதிக உமிழ்வைச் செய்யும் நாடுகளிடமிருந்தும் இலங்கை கோர வேண்டும்" என்ற சம்பிக்க ரணவக்கவின் கருத்து காலநிலை நீதியின் அவசியத்தை உணர்த்துகிறது.

எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை தொடர்பில் விழிப்புணர்வு அவசியமாகும்.

துல்லியமான முன்னறிவிப்பு முறையை வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்துதல், கிராம மட்டத்திலான விழிப்புணர்வு எச்சரிக்கைத் தகவல்கள் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல், பாதுகாப்பான குடியேறதே்தை நோக்கமாகக்கொண்டு

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயப் பகுதிகளில் புதிய கட்டுமானங்களைத் தடை செய்தல், அனர்த்த முகாமைத்துவத்தை ஒரு அரசியல் விடயமாகப் பார்க்காமல், தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதிச் செயல்படுதல் போன்றன முக்கியமாகும். ஜப்பான் இந்தியா மற்றும் மேலைத்தேய நாடுகள் எப்படி சேதங்களை குறைக்கின்றன என்பதிலிருந்து பாடங்களை கற்பது அவசியமாகிறது.

அந்தவகையில் தித்வா புயல் ஒரு கொடூரமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை என்றாலும், "என்னால் மீண்டு வர முடியும்" என்ற மக்களின் மன உறுதி முக்கியமாகும். இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க மனிதனால் முடியாது, ஆனால் அறிவியலையும் திட்டமிடலையும் கொண்டு அதன் பாதிப்புகளை சேதங்களை குறைக்க முடியும். விசேடமாக மக்களின் கால்நடைகளின் உயிரிழப்பை தவிர்க்க முடியும். இதற்கு உலக உதாணங்களும் உள்ளன.

அதன்படி தித்வா கற்றுத்தந்த பாடம் இதுதான்:

"தயார்நிலை என்பது ஒரு தெரிவு அல்ல, அது உயிர்வாழ்வதற்கான அவசியம்." அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் வரும் சீற்றங்களிலிருந்து தேசத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியும். நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து உழைப்பதன் மூலம், சிதைந்த பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்பி, முன்பை விட வலிமையான இலங்கையை உருவாக்குவதற்கு சகலரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது முக்கியமாகும்.

 

நன்றி வீரகேசரி

 

வர்த்தக‌ விளம்பரங்கள்