Paristamil Navigation Paristamil advert login

பாமக உடன் கூட்டணி உறுதி செய்த கையோடு டெல்லி செல்லும் ஈபிஎஸ் !!!

பாமக உடன் கூட்டணி உறுதி செய்த கையோடு டெல்லி செல்லும் ஈபிஎஸ் !!!

7 தை 2026 புதன் 15:24 | பார்வைகள் : 730


அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட உடனே இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய ஈபிஎஸ், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் பேசிய பாமக தலைவர் அன்புமணி, திமுக அரசை அகற்றவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டதாக கூறினார். 

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சிக்கல் நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் தொடர்பான கேள்விக்கு அன்புமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க மறுத்து விட்டனர். பாமக தொடர்பாக தன்னிடம் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், ராமதாஸ் தரப்பினரை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று அன்புமணி நிபந்தனை விதித்ததாகவும், அதனை ஈபிஎஸ் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அதை விட கூடுதல் இடங்களை கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் டெல்லி செல்ல உள்ளார். 

தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, டெல்லி சென்றுள்ள எஸ்.பி.வேலுமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். தற்போது அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் டெல்லி புறப்பட உள்ளார். திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை நேற்று ஆளுநரிடம் வழங்கிய நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதனை ஈபிஎஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவருடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்