Paristamil Navigation Paristamil advert login

இனி விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை

இனி விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த தடை

6 தை 2026 செவ்வாய் 05:57 | பார்வைகள் : 1153


இந்திய விமானங்களில், பயணத்தின் போது பவர் பேங்க் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பயணத்தின் போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதே போல், இனி விமான பயணத்தின் போது, மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தும் பவர் பேங்க் பயன்படுத்த இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தடை விதித்துள்ளது.

பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஆனால், செக்-இன் லக்கேஜ்களிலோ அல்லது விமானத்தின் இருக்கைகளுக்கு மேலே இருக்கும் லக்கேஜ் வைக்கும் இடத்திலோ வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்வதாக இருந்தால், கைப்பையில் (Hand Luggage) மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அதைபயன்படுத்தி சார்ஜ் செய்ய கூடாது.

லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள், விமானத்தின் உள்ளே தீ பிடிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பையில் இருந்ததால், எதிர்பாராத விதமாக தீப்பற்றும் போது, வெப்பத்தை உணர்ந்து அது குறித்து உடனடியாக விமான குழுவினருக்கு தகவல் அளிக்க முடியும்.

லித்தியம் பேட்டரியால் ஏற்படும் தீ விபத்துகள் அதிக ஆற்றல் கொண்டவை, சுயமாகத் தொடர்ந்து எரியக்கூடியவை என்பதால் கட்டுப்படுத்துவது கடினம். மேலும், பிற மின்னணு சாதனங்களையும் வெடிக்க வைக்கும்.

விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக, பவர் பேங்கை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு அறிவிப்பை வழங்க வேண்டும் என DGCA உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, பவர் பேங்க் மூலம் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், DGCA இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை விமான பயணத்தின் போது, பவர் பேங்க் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்