Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க., உடன் கூட்டணி பேச்சு என்பது வதந்தி! காங்., பொறுப்பாளர்

த.வெ.க., உடன் கூட்டணி பேச்சு என்பது வதந்தி! காங்., பொறுப்பாளர்

4 தை 2026 ஞாயிறு 08:18 | பார்வைகள் : 660


தி.மு.க.,வுடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம். த.வெ.க.,வுடன் காங்கிரஸ் பேச்சு நடத்துவதாக வரும் செய்திகள் வதந்தி,” என, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தெரிவித்தார். சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், கட்சி நிர்வாகிகளுடன் கிரிஷ் ஷோடங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, அவர் அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க.,வுடன் மட்டுமே பேச்சு நடத்தி வருகிறோம். த.வெ.க.,வுடன் காங்கிரஸ் பேச்சு நடத்துவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி. ஒரு மாதத்திற்கு முன்பே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினோம்.

தொகுதி பங்கீடு கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க.,வுக்கு எந்த காலக்கெடுவும் நிபந்தனையும் விதிக்கவில்லை.

கூட்டணி பேச்சு சென்னையில் தான் நடக்கும். மேலிடத்தில் பேசுவதாக தி.மு.க., தலைமை கூறி யுள்ளது. சென்னையில் தான் தொகுதி பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தாகும்.

தி.மு.க., உடனான கூட்டணி பேச்சு சுமுகமாக நடந்து வருகிறது. தி.மு.க.,விடம் 38 தொகுதிகள், மூன்று அமைச்சர் பதவிகள் கேட்டதாக யாரும் கூறவில்லை.

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் முடிவு செய்வோம். காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி நம்பகத்தன்மை வாய்ந்தது.

எந்த கட்சியாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தை விரும்பும். தமிழக காங்கிரஸ் தலைமை மீது கரூர் எம்.பி., ஜோதிமணி கூறிய புகார் குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி கட்டுப்பாடு என்பது முக்கியம். உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

நியமனம் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் நடைபயணத்தில் பங்கேற்காதது, தமிழக காங்கிரஸ் தலைமையின் சரியான முடிவு. அந்நிகழ்ச்சியில், 'விடுதலைப் புலிகள்' தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்றதை காங்கிரசால் ஏற்க முடியாது. அதனால்தான் பங்கேற்கவில்லை.

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, 5,000 விருப்ப மனுக்கள் வந்துள்ளன. தொகுதி பங்கீடு முடிந்ததும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், விரைவில் நியமனம் செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்