Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு சில சங்கத்தினர் எதிர்ப்பு

முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு சில சங்கத்தினர் எதிர்ப்பு

4 தை 2026 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 701


முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு, அரசு ஊழியர்கள் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு, அதன் மூலம் ஓய்வூதியம் பெறும் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் என்று அழைக்கப்படும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:

தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலில், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.

பழைய ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம். தற்போது, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய் வூதிய திட்டம் என்பது, அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக சந்தா பிடிக்கும் திட்டமாக உள்ளது.

இந்த திட்டம், புதிய ஓய்வூதிய திட்டத்தின் வடிவமே. இந்த திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கவில்லை. முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஆட்சேபனை தெரிவிக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், பிப்., 3ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார் .

தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் செல்லையா வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் அறிவித்த திட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. இது குறித்து தெளிவான அரசாணையை, தமிழக அரசு விரைவாக செயல்முறைப்படுத்த வேண்டும்.

'அரசு ஊழியர்களிடம் பிடித்தம் இல்லாமல், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருந்தால், இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்திருக்கும். இதை, முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்