Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக்கானுக்கு கிளம்பியது எதிர்ப்பு

ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக்கானுக்கு கிளம்பியது எதிர்ப்பு

3 தை 2026 சனி 05:24 | பார்வைகள் : 143


வங்கதேச கிரிக்கெட் வீரரை ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் அடித்துக் கொல்லப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் 3 பேர் கொல்லப்பட்டனர். மற்றொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் வங்கதேச முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கோல்கட்டா அணி ஏலத்தில் எடுத்தது. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும் நிலையில், அந்நாட்டு வீரரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுப்பதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இது தொடர்பாக சிவசேனாவின் சஞ்சய் நிருபம் கூறியதாவது: நாட்டுமக்கள் வங்கதேசம் மீது கோபமாகவும், ஆத்திரமாகவும் இருக்கும்போது, அந்நாட்டை சேர்ந்தவர்களுடன் இந்தியாவில் யாராவது கோபம் வைத்து இருந்தால் அவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகக்கூடும். ஷாருக்கான் அணியில் ஒரு வங்கதேசத்தவர் இருந்தால், அவர் ஒரு பெரிய இலக்காக மாறுவதற்கு முன்பு அவரை அணியில் இருந்து ஷாருக்கான் நீக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இது ஷாருக்கானுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ஆனந்த் துபே கூறியதாவது: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாட அனுமதிக்கக்கூடாது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஹிந்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை கொன்று பிரிவினையை அவர்கள் அறுவடை செய்கின்றனர். ரஹ்மானை உடனடியாக அணியில் இருந்து ஷாருக்கான் நீக்க வேண்டும். இல்லைஎன்றால், இந்திய மண்ணில் இருந்து கொண்டு, இங்கேயே பணம் சம்பாதித்தாலும், நாட்டின் உணர்வை புரிந்து கொள்ள மாட்டார் என கருத நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜ எம்பி சங்கித் சிங் சோம் கூறியதாவது: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படும்விதம், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது, அவர்கள் வீடுகள் எரிக்கப்படுவது, இந்தியாவுக்கு எதிராக கோஷம் போடுவது போன்றவை நடக்கின்றன. ஷாருக்கானை துரோகி என அழைப்பேன். ஏனென்றால், அவரிடம் உள்ள அனைத்தும் இந்தியா கொடுத்தது . இந்திய மக்கள் கொடுத்தனர். ஆனால், அவர் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார். இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாட்டின் வீரரிடம் முதலீடு செய்கிறார்.

ஷாருக்கான் போன்றவர்கள் வெற்றி பெற முடியாது. என்ன விலைகொடுத்தாலும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இந்தியாவில் விளையாட முடியாது. விமான நிலையத்தை தாண்டி அவரால் வர முடியாது. ஷாருக்கான் போன்றவர்கள் துரோகிகள். அவர்கள் இந்தியாவில் சாப்பிட்டு கொண்டு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை புகழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்