Paristamil Navigation Paristamil advert login

ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி; உதயநிதிக்கு எதிராக ஆதிராஜாராம்.. களமிறக்க பழனிசாமி திட்டம்

2 தை 2026 வெள்ளி 13:13 | பார்வைகள் : 153


கொளத்துார் தொகுதியில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதியையும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து மாவட்டச் செயலர் ஆதிராஜாராமையும் களமிறக்க, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதியும் போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வினர் விரும்புகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி காரணமாக, முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியில் ஒரு லட்சத்து, 3,812; துணை முதல்வர் உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், 89,241 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இருவரும் தொகுதி மாறி போட்டியிடுவரா அல்லது அதே தொகுதியில் போட்டியிடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மகளிர் அணி செயலருமான வளர்மதியை போட்டியிட வைக்க பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.

ஆனால், ஆயிரம்விளக்கு மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் போட்டியிட வளர்மதி விருப்ப மனு கொடுத்துள்ளார். இதையடுத்து, கொளத்துார் தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்குமாறு அவரிடம் கட்சி மேலிடம் வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் துணை முதல்வர் உதயநிதி, சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அ.தி.மு.க., தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலர் ஆதிராஜாராமை நிறுத்த பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.

ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட, ஆதிராஜாராம் விருப்ப மனு வழங்கியுள்ளார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜாராம் போட்டியிட்டார். தற்போது, கொளத்துார் தொகுதிக்கு அவர் விருப்ப மனு கொடுக்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்