Paristamil Navigation Paristamil advert login

நெல்லிக்காய் சட்டினி...

நெல்லிக்காய் சட்டினி...

1 தை 2026 வியாழன் 16:03 | பார்வைகள் : 112


நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று விதமான சுவைகள் உள்ளன. இதனை சட்னியாக அரைத்து சாப்பிடும் பொழுது சுவை மிகுந்ததாகவும், ஆரோக்கியம் உள்ளவையாகவும் இருக்கின்றது. குறிப்பாக குழந்தைகள் இதனை சாப்பிடும் பொழுது அவர்களுக்கு பலவிதமான சத்துக்கள் கிடைக்கக்கூடிய விதமாகவும் இருக்கும்.

இதற்குத் தேவையான பொருட்கள் என்னவென்றால், துருவிய தேங்காய் - 1/2 கப், பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை-1 கொத்து, கொத்தமல்லி - 1 கையளவு, பூண்டு - 4 பல், நெல்லிக்காய் - 3, உப்பு - சுவைக்கேற்ப, புளி - சிறிய துண்டு, தண்ணீர் - தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் தாளிப்பதற்கு, எண்ணெய் -2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, வரமிளகாய் - 1, பெருங்காயத் தூள் - 4 டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மிக்ஸியில் துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 1 கையளவு கொத்தமல்லி, 4 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அதன் பின் அதில் 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும். பின்பு சிறு துண்டு புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி மிகவும் கெட்டியாக இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.

அவ்வளவுதான் இந்த சட்னியை தோசை இட்லி சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிடும் பொழுது அட்டகாசமாக இருக்கும். ஒரு இட்லி சாப்பிடும் குழந்தைகள் கூட இரண்டு மூன்று இட்லியை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவை மிகுந்த சட்னியாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்