Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் பண்டிகையை தி.மு.க., அரசு மதமாற்றம் செய்துள்ளது: அர்ஜுன் சம்பத்

பொங்கல் பண்டிகையை தி.மு.க., அரசு மதமாற்றம் செய்துள்ளது: அர்ஜுன் சம்பத்

31 மார்கழி 2025 புதன் 09:13 | பார்வைகள் : 216


பொங்கல் பண்டிகையை தி.மு.க., அரசு மதமாற்றம் செய்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோருக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்” என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரில் சக்தி ஆன்மிகக் குழு சார்பில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:

வைகுண்ட ஏகாதசியை ஹிந்து சமய அறநிலையத்துறை வியாபாரமாக நடத்துகிறது. பக்தியை வைத்து அறநிலையத்துறை வியாபாரம் செய்யக்கூடாது. கோவில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்; தர்ம தரிசனம் முறையை அமல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள், செவிலியர்கள், துாய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர். பெயரளவில் சில மதுக்கடைகளை மூடிவிட்டு, மது விற்பனையை தி.மு.க., அரசு அதிகரித்துள்ளது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு வில்லன்.தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கும், விவேகானந்தர் பிறந்த தினத்தன்றும் மதுக்கடைகளை மூட வேண்டும். பொங்கல் என்பது ஹிந்துக்கள் பண்டிகை. ஆனால் தி.மு.க., அரசு பொங்கல் பண்டிகையை மதமாற்றம் செய்துள்ளது. பொங்கல் கொண்டாடுவோருக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.

சர்ச்சுகளுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்திவிட்டு அறநிலையத்துறை சார்பில் புதிதாக கோவில்கள் கட்ட வேண்டும். தமிழகத்தில் உதயநிதிக்கும், விஜய்க்கும் இடையே கிறிஸ்துவ ஓட்டுகளைப் பெறுவதில் போட்டி நடக்கிறது. த.வெ.க.,வை உருவாக்கியதே தி.மு.க., தான். கடந்த தேர்தலில், கமலை வைத்து ம.நீ.ம., கட்சியை தி.மு.க., உருவாக்கியது. இந்த தேர்தலில் விஜயை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்