ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை
31 தை 2026 சனி 08:33 | பார்வைகள் : 626
அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் அமைப்பு (UN) உடனடி நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
“அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களின் நிதி கடமைகளை முழுமையாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரியாகவும் நிறைவேற்ற வேண்டும்.
உடனடி நிதிச்சரிவைத் தடுக்க, ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிதி விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டு பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை. எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அதிகளவில் நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, ஐ.நா.வின் வழக்கமான ஆண்டு வரவு–செலவுத் திட்டத்திற்கு 2.16 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த ஆண்டுக்கான கூடுதல் கட்டணமாக 767 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவால் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்கா 1.568 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பான அளவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, வெனிசுலாவும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
ஆனால், அந்த நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், நிதி கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உறுப்பு நாடுகளின் நிதி பங்களிப்புகள் தாமதமாகவோ அல்லது செலுத்தப்படாமலோ இருப்பதால் ஐ.நா. செயல்பாடுகளான அமைதிப்படை நடவடிக்கைகள், மனிதாபிமான உதவித் திட்டங்கள், அகதிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போன்ற முக்கிய ஐ.நா. செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இந்நிலையில், நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உடனடி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்பு நாடுகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தருணம் இது எனவும் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan