Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் அதிரடி...! 24 மணித்தியாலம் 52 பேர் பலி

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் அதிரடி...! 24 மணித்தியாலம் 52 பேர் பலி

31 தை 2026 சனி 08:26 | பார்வைகள் : 702


ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் வழங்கப்படுவதே இந்த தாக்குதல்களுக்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் தெரிவித்து வருகின்றது. 

இதனை தலிபான் அரசு மறுத்து வந்தாலும், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு தரப்புகள் கூறுகின்றன.

இந்த பின்னணியில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று மாகாணங்களில் மேற்கொண்ட தனித்தனி எதிர் பயங்கரவாத நடவடிக்கைகளில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை (CTD) மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நடவடிக்கையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் மொத்தம் 41 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற மோதலில், ஒரு தளபதி உட்பட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இடம்பெறும் தாக்குதல்களை அடுத்து, எல்லையோர பகுதிகளில் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்களை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் கடுமையாக ஒடுக்குவோம் என பாகிஸ்தான் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்