Paristamil Navigation Paristamil advert login

ஈரான் உடனான மோதலைத் தவிர்க்க ட்ரம்பின் 02 முக்கிய நிபந்தனைகள்

ஈரான் உடனான மோதலைத் தவிர்க்க ட்ரம்பின்  02 முக்கிய நிபந்தனைகள்

30 தை 2026 வெள்ளி 10:58 | பார்வைகள் : 524


வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் குவித்து வரும் நிலையில், ஈரான் உடனான மோதலைத் தவிர்க்க அந்த நாடு இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் தனது மனைவி மெலனியா குறித்த ஆவணப்படத்தின் (Documentary) வெளியீட்டு விழாவில் பேசிய ட்ரம்ப், ஈரானுக்கு விடுத்துள்ள நிபந்தனைகள்:

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட்டு, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்.

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கொல்வதை அந்த நாட்டு அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். 

"அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று வருகிறார்கள்" என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானை நோக்கி மிக சக்திவாய்ந்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், "அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்" என எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

ஏற்கனவே ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' போன்ற தாக்குதல்களை முன்னெடுத்த டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அடுத்த தாக்குதல் "மிக மோசமானதாக இருக்கும்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஈரானிய ராணுவம் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் "விரல்கள் தூண்டுதலில் (Trigger) இருப்பதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி நிலைப்பாடு: ஈரான் எப்போதும் அமைதியான முறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவதையே விரும்புவதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சமமான மற்றும் மரியாதையான பேச்சுவார்த்தைக்கே ஈரான் தயாராக உள்ளதே தவிர, மிரட்டல்களுக்குப் பணியாது எனவும் அரக்சி கூறியுள்ளார்.

ஈரானிய நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் இறுதியில் அங்கு பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்