அ.தி.மு.க.,வில் ஓ.பி.எஸ்.,சை சேர்க்க வாய்ப்பே இல்லை! ; பழனிசாமி
30 தை 2026 வெள்ளி 11:37 | பார்வைகள் : 658
அ.தி.மு.க., பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை, மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை,'' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், தினகரனின் அ.ம.மு.க., சேர்ந்ததால், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும் சேர்வார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் அ.தி.மு.க.,வில் பழையபடி இணைய வேண்டும் என்பதையே, மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 8ம் தேதி, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் பேட்டியளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வில் மீண்டும் சசிகலா, பன்னீர்செல்வத்தை சேர்க்கும் எண்ணம் இல்லை' என்றார்.
அதன்பின், பன்னீர் செல்வத்துடன் இருந் த முன்னாள் அமைச்சர் வைத் திலிங்கம், தி.மு.க.,வில் இணைந்து விட்டார். ராஜ்யசபா எம். பி., தர்மரும், அ.தி.மு.க., பக்கம் வந்து விட்டார்.
இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில், நேற்று ஆதரவாளர் களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இணைய தயாராக உள்ளேன்
பின், அவர் அளித்த பேட்டி:
எங்கள் பக்கமும் தொண்டர்கள் உள்ளனர் என்பதை காட்டுவதற்காகவே, சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன்.
எனக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு வேட்பாளர்களை நிறுத்தி சூழ்ச்சி செய்தனர்; சூழ்ச்சியைமுறியடித்தேன்.
அ.தி.மு.க.,வை மீட்கவே தொண்டர்கள் குரலாக, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது வரை, அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது தான் நோக்கமாக உள்ளது.
'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பன்னீர்செல்வமும் வர வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார். தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், தினகரன், அவருடைய அருமை அண்ணன் பழனிசாமியுடன் பேச்சு நடத்த வேண்டும்.
அவர் ஒப்புக் கொண்டால், இணைய தயாராக உள்ளேன். தினகரன் தான் இணைப்புக்கு வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
யார் அரசியலுக்கு வரச் சொன்னது?
இதற்கு உடனடியாக, பழனிசாமி பதிலளித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில் அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., பொதுக்குழு வாயிலாக, பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டோம்; இனி, அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, விஜயால் எதிர்த்து பேச முடியவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு, அரசியலுக்கு வந்திருப்பதாக, விஜய் சொல்கிறார்; அப்படி அவரை யார் அரசியலுக்கு வரச் சொன்னது?
கொரோனா காலத்தில் கூட வெளியே வந்து, மக்களை சந்திக்காதவர் விஜய். அரசாங்கம் நடத்த அனுபவம் தேவை. அது இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியாது. தமிழகம், பல்துறைகளிலும் வளர்ச்சி அடைந்ததற்கு, அ.தி.மு.க., ஆட்சியே காரணம்.
அ.தி.மு.க., கூட்டணியில், மேலும் சில கட்சிகள் சேரும். அக்கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தி.மு.க., அரசால், அதை தடுக்க முடியவில்லை.
தி.மு.க., ஆட்சியில், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அந்த ஊழல்கள் குறித்து, கவர்னரிடம் பட்டியல் கொடுத்து, நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளோம்.
கடந்த முறை தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தான், அனைத்து துறை ஊழியர்களும் போராடுகின்றனர். அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை. தி.மு.க., தான், டில்லிக்கு அடிமையாக உள்ளது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை, 'அதானி தேர்தல் அறிக்கை' என கனிமொழி கூறுகிறார். நிறைவேற்றாத தி.மு.க., அறிக்கையை விட, 1,000 மடங்கு மேலானது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan